

நடப்பு நிதி ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் அடுத்த மாதம் முடிவு செய்யப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:பிஎப் அறங்காவலர் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வட்டி விகிதத்தை முடிவு செய்யும். இது தொடர்பாக விரைவில் கூட்டத்தை கூட்ட இருக்கிறோம்.
பிஎப் தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்ததன் மூலமாக 13.3 சதவீதம் வருமானம் கிடைத்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் வருமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப அறங்காவலர் குழு வட்டி விகிதத்தை பரிந்துரை செய்யும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும். கடந்த நிதி ஆண்டில் 8.65 சதவீதம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டின் முடிவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் தொகை ரூ.45,000 கோடியாக உயரும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பிஎப் தொகையை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து நடப்பு நிதி ஆண்டின் முடிவில் ரூ.45,000 கோடி என்னும் அளவினை எட்டும். சந்தை சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் தொகையை உயர்த்தி இருக்கிறோம் என்று கூறினார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நிலவரப்படி ரூ.21,559 கோடி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.6,577யும், 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.14,982 கோடியும் முதலீடு செய்யப்பட்டது. மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து வரும் சூழ்நிலையில், பிஎப் மீதான வட்டியும் 0.25 சதவீதம் வரை குறைக்கப்படும் என்னும் அச்சமும் இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 8.8 சதவீதமாக இருந்த பிஎப் வட்டி விகிதம் கடந்த நிதி ஆண்டில் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டது.