Published : 23 Jul 2017 10:36 AM
Last Updated : 23 Jul 2017 10:36 AM

ஜிஎஸ்டி-யில் இருந்து சிறு வியாபாரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கலாம்: ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதற்கு இதுவே சரியான தருணமாகும். இருந்தாலும் இந்த வரியில் இருந்து சிறு வியாபாரிகள், வர்த்தகர்களுக்கு விலக்கு அளித்திருக்கலாம் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார். ஜிஎஸ்டி ஒரே நாடு, ஒரேவரி என்னும் தலைப்பில் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் குருமூர்த்தி இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியதாவது:

எந்த ஒரு புதிய விஷயங்களை நடைமுறைப்படுத்தினாலும், ஏன் என்று ஆராயாமல் எதிர்க்கும் மனநிலையே இங்கு இருக்கிறது. பணமதிப்பு நீக்கம் அமல்படுத்திய சமயத்திலும் எதிர்ப்பு இருந்தது. நாட்டில் உயர் மதிப்பு நோட்டுகள் ரூ.15 லட்சம் கோடி மதிப்பில் இருந்தன. இதில் ரூ.6 லட்சம் கோடி நோட்டுகள் வங்கி அமைப்புக்குள் வராமலே புழக்கத்தில் இருந்தன. பண மதிப்பு நீக்கம் தற்போது அமல்படுத்தாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். இன்னும் சில ஆண்டுகள் விட்டிருந்தால், இந்த முடிவை நம்மால் எடுக்கவே முடிந்திருக்காது.

அதேபோல சரியான நேரத்தில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 117 வகையான வரி விகிதங்கள் பல வகைகளில் உள்ளன. உதாரணத்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் அரிசிக்கு 16 சதவீதம் வரி இருந்தது. இவை நீக்கப்பட்டு 4 வகையான வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் சரக்கு போக்குவரத்து மிகவும் எளிதாகி இருக்கிறது. எங்கிருந்து வேண்டுமானாலும் பொருட்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இது முக்கியமான பலன். அதேபோல பிரச்சினை உள்ள பல வரிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரிகள் லஞ்சத்தை அதிகப்படுத்தின. தற்போது ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதால் லஞ்ச ஊழல் குறையும். தவிர முன்பு வரி விகிதங்களை மாற்ற நினைத்தால் ஒரு அமைச்சர் கூட மாற்ற முடியும். ஆனால் தற்போது வரி விகிதங்களை ஜிஎஸ்டி குழு நிர்ணயம் செய்ய இருக்கிறது. இதனால் ஓரிரு அமைச்சர் நினைத்தாலும் மாற்ற முடியாது.

இது சாதகமாகவே இருந்தாலும், சமயங்களில் இது பாதகமாகும் வாய்ப்பு இருக்கிறது. தவறான வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்படும் பட்சத்தில் அதை மாற்றுவதற்கு சிரமப்பட வேண்டி இருக்கும். அதேபோல ஜிஎஸ்டியால் சிறுவணிகர்கள், வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். முதல் மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு அவர்களுக்கு விலக்கு கொடுத்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர்கள் மூலப்பொருட்களை ஜிஎஸ்டி வரி செலுத்தியே வாங்கி இருப்பார்கள். அவர்கள் விற்கும் பொருளுக்கு வரி இல்லாமல் இருந்தாலும் பெரிய அளவிலான வருமான பற்றாக்குறை இருந்திருக்காது. இது போல சிறுசிறு குழப்பங்கள் இருந்தாலும் நீண்ட காலத்துக்கு இந்த வரி நன்மை பயக்கும் என்று குருமூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பண்ணாரி அம்மன் சுகர்ஸ் தலைவர் எஸ்.வி பாலசுப்ரமணியம் கூறியதாவது: பொதுவாக ஜிஎஸ்டியை பற்றி கருத்து கூற முடியாது. ஆனால் எங்கள் துறையை எடுத்துக்கொண்டால் இது மிகவும் பயனுள்ள மாற்றமாகும். சர்க்கரையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாநிலத்தில் வெவ்வேறு வகையான வரிவிகிதங்கள் இருந்தன. ஆனால் ஜிஎஸ்டிக்கு பிறகு நாடு முழுவதும் 5 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கரும்பை தவிர தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை குறைந்திருக்கிறது.

ஆனால் அன்றாட மக்கள் உணவு செலவு முன்பை விட உயர்ந்திருக்கிறது. இதை குறைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x