

பணமதிப்பு நீக்கம் காரணமாக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற நிதி நிலைக்குழு ரிசர்வ் வங்கி கவர்னரிடம், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு விவரங்களை வழங்குமாறு கேட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய நோட்டுகளை எண்ணும் பணி இன்னும் தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் நிலைக்குழுவிலிருந்த ஒரு உறுப்பினர், கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து டிசம்பர் 30-ம் தேதி வரை எவ்வளவு பணம் பழைய நோட்டுக்கு பதிலாக மாற்றிக்கொடுக்கப்பட்டது என்பதை கேட்டார். இதற்கு பதிலளித்த உர்ஜித் படேல், தற்போதைய நிலவரப்படி நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. 15.4 லட்சம் கோடி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கத்தின் போது ரூ.17.7 லட்சம் கோடியாக இருந்தது என்று பதிலளித்தார்.