Last Updated : 21 Jul, 2017 09:16 AM

 

Published : 21 Jul 2017 09:16 AM
Last Updated : 21 Jul 2017 09:16 AM

வணிக நூலகம்: உங்களுக்கு நீங்களே பயிற்சியாளர்!

எவ்வித வெளிப்புற சக்தியும் பெரிதாக நமது வளர்ச்சிக்கு உதவி செய்திட முடியாது மற்றும் அனைத்து ஆற்றலும் நமக்குள்ளேயே இருக்கிறது என்றெல்லாம் நிறைய படித்தாகிவிட்டது. நம்மிடமுள்ள ஆற்றலை எவ்வாறு செயல்பாட்டு நிலைக்கு கொண்டுவருவது மற்றும் அதன்மூலம் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதே இனி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அல்லவா!

எனக்கு நேரமே சரியில்லை, எனக்கு சரியான வழிகாட்ட யாருமில்லை, எனக்கு எதுவுமே சரியாக அமைவதில்லை, எனது வாழ்க்கையில் எப்போது மாற்றம் வரப்போகிறதோ, ஏதாவது உதவி கிடைத்தால் பரவாயில்லை போன்ற புலம்பல்களுக்கான தீர்வினையும் வழிகாட்டுதல்களையும் சொல்கிறது “அந்தோணி கிரான்ட்” மற்றும் “ஜானே கிரீனே” ஆகியோரால் எழுதப்பட்ட “கோச் யுவர்செல்ஃப்” என்னும் இந்தப் புத்தகம்.

மாற்றம் மட்டுமே வாழ்க்கை!

மாற்றம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப்பற்றிய பயம் நம்மில் பலருக்கு உண்டு. நமக்கு எது தெரியுமோ, நமக்கு எது பாதுகாப்பானதோ மற்றும் எது பெரிதாக பிரச்சினை இல்லாமல் இருக்கிறதோ அதுவே போதும் என்ற மனநிலையை உடையவர்கள் ஏராளம். அதில் போதுமான மகிழ்ச்சி இல்லையென்றாலும் கூட. ஆனால் இது முற்றிலும் தவறானது என்கிறார்கள் ஆசிரியர்கள். மாற்றத்தை நோக்கி பயணப்படாத வாழ்க்கை, சிறந்த வாழ்க்கையல்ல. இதில் வேடிக்கையான முரண்பாடு என்னவென்றால், மாற்றங்களில் பலருக்கு விருப்பமில்லை என்றாலும்கூட அதை அவர்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதே.

நேரம் மாறிக்கொண்டே இருக்கிறது, பருவநிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன, ஏன் நமது வயதுகூட மாறிக்கொண்டே இருக்கிறது. ஆக வாழ்க்கை என்பதே மாற்றம்தான். நாமும் மாற்றங்களை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டால் மட்டுமே, எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியும். வேலை, தொழில், மனநிலை, நட்பு, குடும்பம், உறவுகள் மற்றும் பகை என நம்மைச்சுற்றி மாற்றம்பெற வேண்டிய அல்லது மாற்றத்தை செயல்படுத்தக்கூடிய காரணிகள் நமது வாழ்க்கையில் ஏராளம். பயத்தை விட்டொழித்து மாற்றத்தை நேருக்குநேர் சந்தியுங்கள். நல்ல மாற்றமென்றால் அது நமக்கான பரிசு, மோசமான மாற்றமென்றால் அது நமக்கான பாடம் அவ்வளவே.

தடைகள் எதுவுமில்லை!

மாற்றம் மாற்றம் என்று பேசுகிறோமே அதற்கான காலநேரம் அல்லது வயது அல்லது அனுபவம் என்று ஏதாவது உண்டா?. கண்டிப்பாக இல்லை என்பதே இதற்கான பதில். அனைத்து வயதிலும் மாற்றம் சாத்தியமே. நமது பின்புலம் மற்றும் அனுபவம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. எவ்வளவோ வெற்றியாளர்கள் எவ்வித பின்புலமும் அனுபவமும் இல்லாமல் பெரும் வெற்றிகளைப் பெற்ற வரலாறு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் தனது அறுபத்து எழாவது வயதில்தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டாராம். 122 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த ஜின்னே கால்மென்ட் 1995 ஆம் ஆண்டு தனது 120வது பிறந்தநாளில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்: பிரபலமடைவதற்காக நான் 110 ஆண்டுகள் காத்திருந்தேன், முடிந்தவரை இதை அனுபவிக்க திட்டமிட்டுள்ளேன் என்றாராம்.

வாழ்க்கைப் பயிற்சி!

எந்தவொரு தீவிர விளையாட்டு வீரரும் தங்களுக்கான பயிற்சியாளர் இல்லாமல் இருப்பதில்லை என்பது நாம் அறிந்ததே. ஆக, முறையான பயிற்சியே சீரிய வெற்றியைத் தேடித்தரும். இதுவே நமது வாழ்க்கைக்கும், அதன் வெற்றிக்கும் பொருந்தும் என்கிறார்கள் ஆசிரியர்கள். மனதளவில் மாற்றத்திற்கு தயாராகிவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?. மாற்றத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டியதே அடுத்தகட்ட செயல்பாடு. ஆனால், இங்கு நாம்தான் நமக்கான பயிற்சியாளர். நம்மைப்பற்றி நம்மைத்தவிர வேறு யாருக்கு அதிகம் தெரிந்துவிடப்போகிறது. ஆம் பயிற்சி கொடுக்கப்போவதும், பயிற்சி எடுத்துக்கொள்ளப்போவதும் நாமே.

இது நாம் நம்மிடமே கேட்டுக்கொள்ளக்கூடிய மூன்று கேள்விகளிலிருந்து தொடங்குகிறது. அவை: நமது வாழ்க்கையில் நாம் செய்யவேண்டியது என்ன?. அதைச் செய்வதிலிருந்து நம்மை தடுப்பது எது?. அதை எவ்வாறு நிவர்த்தி செய்வது?. இவற்றிற்கான வழிமுறைகளும் ஆசிரியர்களால் சொல்லப்பட்டுள்ளது. அவை: நமது வாழ்க்கைத் தேவைகளை சரியாக தெளிவுபடுத்திக்கொள்வது, பயனுள்ள இலக்குகளை அமைத்துக்கொள்வது, மாற்றத்தின் பயணத்தில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது, செயல்பாட்டில் உறுதியான நிலைப்பாடு மற்றும் கவனம், திட்டங்கள் மற்றும் உத்திகள் மீதான தொடர்ச்சியான மதிப்பீடு ஆகியன.

சிறியதாய் தொடங்குங்கள்!

ஏன் பலரும் தங்களுக்கான மாற்றங்களை மேற்கொள்வதில் தோல்வியடைகிறார்கள் என்றால், வெகு சீக்கிரமாக பெரியளவில் மாற்றம்பெற வேண்டுமென்ற எண்ணமே என்கிறார்கள் ஆசிரியர்கள். எதையும் சிறியதாய் தொடங்கும்போது மட்டுமே நீடித்த வெற்றியைப் பெறமுடியும். உதாரணமாக நமது அலுவலகம், கார், சமையலறை, அலமாரி, படிக்கவேண்டிய புத்தகங்கள், நடைபயிற்சி மற்றும் உணவு பழக்கம் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதிலிருந்து ஆரம்பியுங்கள். அதிலும் ஒரு நாளைக்கு பத்து நிமிடம் என்று ஒரு வார காலத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். வார இறுதியில் அதன் பலன் உங்களுக்கு தெரியவரும் வேளையில், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாட்டினை விரிவுபடுத்துங்கள்.

தீர்வைத் தேடி!

உருவாகியுள்ள சிக்கலிலேயே தொடர்ந்து மனதை செலுத்தாமல், அடுத்தகட்ட செயல்பாட்டினை நோக்கிச் செல்வதே சிறந்தது. உதாரணமாக உங்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்காக நீங்கள் நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பல்வேறு காரணங்களால் அந்த பதவியானது புதிய நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுவிடுகிறது. உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நீங்கள் நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக கருதுகிறீர்கள் மற்றும் மிகுந்த கோபமடைகிறீர்கள். மன உளைச்சலுடன் மகிழ்ச்சியின்றி பணியாற்றுவதால் உங்கள் வேலையின் தரமும் மோசமடைகிறது.

ஆனால், அது ஒரு நல்ல நிறுவனம், சிறந்த பாரம்பரியத்தை உடையது மற்றும் நிறுவன சூழ்நிலையும் உங்களுக்குப் பிடித்ததாகவே இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்தச் சூழ்நிலையில் தீர்வை நோக்கிய அணுகுமுறையை நீங்கள் கையாளவேண்டியது அவசியம். இந்த தருணத்தை உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளவேண்டும். உங்களது பணியில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள் போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்தி, உங்கள் பணியில் நிபுணராக முயற்சிக்க வேண்டும். இடையில், சிறந்த மாற்றுப் பணிக்கான தேடுதலையும் ஒருபக்கம் மேற்கொள்ளுங்கள்.

சிறந்த செயல்பாடுகள் உங்களால் மேற்கொள்ளப்படும்போது, அது நிர்வாகத்தின் கவனத்தை உங்களை நோக்கி ஈர்க்கும். அப்படியும் உங்களை யாரும் கவனிக்கவில்லை என்றாலோ அல்லது எதிர்பார்த்த பலன்கள் உங்கள் நிறுவனத்தில் கிடைக்கவில்லை என்றாலோ கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் தரத்தை நீங்கள் உயர்த்திக்கொண்டமையால், நம்பிக்கையுடன் நல்ல மாற்றுப்பணிக்காக வேறொரு நிறுவனத்தை நாடலாம்.

உங்களுக்காக நீங்கள் மேற்கொண்ட பயிற்சியில் கிடைத்த வெற்றியின் பலனை முழுமையாக கொண்டாடுங்கள். மேலும் அதன் மீதான கண்காணிப்பையும் மேற்கொள்ளுங்கள். இதுவே உங்களை அடுத்த இலக்கிற்கான செயல்பாடுகளில் தன்னம்பிக்கையுடன் பயணிக்க வைக்கும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x