Last Updated : 14 Jul, 2017 10:43 AM

 

Published : 14 Jul 2017 10:43 AM
Last Updated : 14 Jul 2017 10:43 AM

வணிக நூலகம்: மகிழ்ச்சியின் காரணிகள்...

வாழ்வில் ஏற்படக்கூடிய நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சியை தீர்மானிக்கின்றன. வாழ்க்கையில் வெற்றியடைவதும் மகிழ்ச்சியை பரப்புவதும் நேர்மறை மாற்றங்களை தொடர்வதும் மகிழ்ச்சியை அடைவதற்கான மேலதிகமான உத்திகளாகும். வாழ்வில் அடையும் வெற்றிகள் மகிழ்ச்சி தொற்று ஆகும். மாற்றங்களை நேர்மறையாக புலன் காணுவது வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். ஆய்வு முடிவுகளையும் மேற்கோள்களையும் வெகுவாக நூலாசிரியர் (Shawn Achor) கையாண்டு இருக்கிறார். நேர்மறை எண்ணங்களும் செயல்களும் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் அடித்தளமாக அமைகின்றன. எதிர்மறை எண்ணங்கள் நம்பிக்கையை நாசமாக்கி மகிழ்ச்சியை மாற்றிக் காட்டி வெற்றியை அடைய முடியாமல் அலையவைக்கும்.

கீழே கூறப்பட்ட ஆறு காரணிகளும் முக்கியமான கருத்தாக்கம் ஆகும்.

1. மகிழ்ச்சியும் வெற்றியும் அடைய வேண்டும் என்றால் அவைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு முக்கியம். அந்த நம்பிக்கைதான் நம்மை வழிநடத்தும். நம்பிக்கை இல்லாத மகிழ்ச்சியும் வெற்றியும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

2. நேர்மறை மனப்பாங்கு என்பது மாயை ஏற்படுத்தும் நம்பிக்கைக் களம் ஆகாது. நேர்மறை மனப்பாங்கு சில நேரங்களில் அடைய முடியாத மாயையை தோற்றுவிப்பது போல் தெரியும். ஆனால், நம்பிக்கையும் எண்ணங்களும் அது மாயை அல்ல என உணர்த்தி மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் வழிகாட்டும்.

3. மாற்றங்கள் மாறாதது மற்றும் மகத்தானது என்பது நேர்மறை மனப்பாங்கு இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். மாற்றங்கள் இல்லை என்றால் முன்னேற்றம் கிடையாது.

4. மனித மூளை குறைந்த சதவீதத்தில் ஆன புலன்கள் சார்ந்த தரவுகளை வரவேற்கும். அதிகமான செய்திகளை கண்ணால் பார்க்க முடியாது. மனித மூளை பெறக்கூடிய புலன் சார்ந்த தரவுகளை பதப்படுத்துவதில் தான் வெற்றியின் ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கின்றது.

5. நேர்மறை எண்ணங்கள் சரியான முறையில் நனவாகக் கூடிய செயல்களை தேர்ந்தெடுத்து அவைகளை உள்வாங்கி மகிழ்ச்சிக்கு பாதை போடும்.

6. மருண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பதை போல ஒரு குடுவையில் பாதி வெற்றிடத்தை காண்பவர்கள் கவலையின் பிடியிலும் இருளடைந்த மனதை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். ஒரு குடுவையின் பாதி அளவு நிரம்பியதை காண்பவர்கள் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் காணப்படுகிறார்கள். ஒரே குடுவையில் பாதி குறையை கண்டவர்கள் எதிர்மறை எண்ணத்தையும் பாதி நிறையை கண்டவர்கள் நேர்மறை எண்ணத்தையும் உடையவர்களாக கருதப்படுகின்றனர். இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள்.

மேலே கூறிய ஆறு கருதுகோள்களையும் எவ்வாறு அடைவது பற்றி கீழே காணலாம்.

1. பல்வேறு உண்மையான பொருத்தமான காரணிகளை நன்கு ஆய்ந்து சரியான உண்மையான காரணி எது என்று கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறியும் பொழுது நேர்மறை வளர்ச்சிக்கு அது எந்த அளவிற்கு துணை நிற்கும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். நேர்மறை வளர்ச்சிக்கு பொருந்துமாறு சரியான காரணிகளை தேர்வு செய்ய வேண்டும்.

2. முன்னேற்றமும் வளர்ச்சியும் அடைய வேண்டும் என்றால் மனதளவில் ஒரு கற்பனை பாதையை உருவாக்கி எந்த எந்த புள்ளிகளில் இணைப்புகளை ஏற்படுத்தி முன்னேற வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு மனதளவில் உருவாக்கும் பாதையை கண்முன் நிறுத்தி தெளிவான தொலைநோக்கு பார்வையில் சரியான புள்ளிகளை இணைக்கும் பொழுது வெற்றிக்கு உத்திரவாதம் கிடைக்கின்றது.

3. எந்த ஒரு இலக்கையும் அடைய துடிக்கும் பொழுது பாதி கிணறு அல்லது முக்கால் கிணறு தாண்டும் பொழுது ஒரு உத்வேகம் பீரிட்டு கிளம்பும். அந்த உத்வேகத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டாட வேண்டும். குறுகிய எளிதில் எட்டக் கூடிய இலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு பெரிய முக்கியமான இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

4. அவ்வாறு இலக்குகளை இணைத்து முன்னேறும் பொழுது வாய்ப்புகளையும் தேவைகளையும் வளங்களையும் ஆராய்ந்து பார்த்து ஒவ்வொன்றிலும் ஏற்படக்கூடிய குறைபாடுகளை சரியான முறையில் நிவர்த்திக்க வேண்டும். வாய்ப்புகள் சில நேரங்களில் வசப்படுவது போல் தெரியும் அந்த நேரத்தில் ஓங்கி குரல் எழுப்பி அதிவேக நடைமுறைகளை மேற்கொள்ளுவதால் இலக்குகளை இழக்க வேண்டி இருக்கும்.

தேவையில்லாத செய்திகளை அளவிற்கு அதிகமாக உள் வாங்கும் பொழுது அவை இலக்குகளை அடையக் கூடிய நேரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்களில் இலக்குகளை எட்டிவிடும் பொழுது தேவையற்ற தகவல்களோ ஆர்பாட்டமான செயல்களோ வெற்றியை புரட்டி போட்டுவிடும்.

5. நேர்மறை மனப்பாங்கை ஊதிப் பெரிதாக்குங்கள், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சாதகமான தொலைநோக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாய் மொழியை போல உடல் மொழியும் தொட்டால் பற்றிக்கொள்ளும் மகிழ்ச்சியை முகத்தில் தேக்கினால் வளர்ச்சியை அடைய முடியும். முதிர்ச்சியை முயன்று செயல்களில் கொண்டு வந்தால் மற்றவர்களும் முதிர்ச்சி ஆன எண்ணங்களை வளர்க்க தூண்டுதலாக அமையும். இது போன்ற நேர்மறை செயல்களை முன் எடுத்து நடத்தும் பொழுது உடன் இருப்பவர்களுக்கும் அந்த நம்பிக்கை பற்றிக்கொள்ளும். உடல் மொழியை பற்றி கூறும் பொழுது வார்த்தைகளால் வடிவமைக்க முடியாத கருத்துகளை கூட செவ்வனே செலுத்தி வியப்பளிக்கும் வெற்றிகளை பெற்றுத்தரும். கண்களை குறுக்கி பார்ப்பதற்கும் மகிழ்ச்சியால் விரித்து பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை உணர்ந்து பார்த்தால் புரியும்.

கோர்வையான பேச்சை வேகமாக வாரிவிடும் பொழுது அதில் உள்ள நன்மைகளையும் தன்மைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் வேக ஓட்டத்தால் மாற்றுக் கருத்தாக அவைகளை பதிவு செய்யும் சூழ்நிலைகள் அனேகம். எந்த ஒரு சூழ்நிலையிலும் முதலில் பேசும் வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் பொழுது அங்கே பேசக்கூடிய கருத்துகளுக்கும் உரையாடல் துவக்கத்திற்கும் தோற்றுவாயாக அமைகின்றது. சில நேரங்களில் எதிர்மறையாளர்கள் சூழ்திருக்கும் குழுவில் நேர்மறை சாதக பேச்சு மற்றவர்களிடம் உள்ள தீய காற்றை அழித்துவிடும்.

எதிர்மறையாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்களும் கூட நம்முடைய நேர்மறை எண்ணங்களின் வெளிப்பாட்டாலும் ஆரம்பித்து வைக்கும் சுருதி லயத்தாலும் ஈர்க்கப்பட்டு வெட்டிப் பேசுவதற்கு பதிலாக ஒட்டி பேச ஆரம்பித்து விடுவார்கள். அது போன்ற சூழ்நிலைகளில் அனைவரும் நேர்மறை எண்ணங்களை பரிமாறும் பொழுது மகிழ்ச்சி கொப்பளிக்கும். மந்தகாசம் பூ பூக்கும்.

மகிழ்ச்சி என்பது எதிர்மறை செயல்களையும் மனிதர்களையும் தவிர்த்தல் அல்ல. மாறாக, அவைகளை எதிர்கொண்டு மாற்ற முயலுதல் என்பதே சரியாகும். இன்னும் கூறப் போனால் நம்மிடம் மாற்றக் கூடிய சக்தி உள்ளது என்ற நம்பிக்கையே மகிழ்ச்சியை தோற்றுவிக்கும்.

வெற்றி என்பது நுண்ணறிவு அளவுகோல் அல்ல மாறாக, வெற்றி என்பது நுண்ணறிவை எந்தளவிற்கு பயன் படுத்த முடியும் என்ற நம்பிக்கையே ஆகும். நம்புங்கள். வெல்லுங்கள். மகிழ்ச்சி பூக்களை பூக்கச் செய்யுங்கள். மகிழ்ச்சி உங்களிடம்.

தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x