மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: பண மோசடி தடுப்பு நீதிமன்றம் உத்தரவு

மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: பண மோசடி தடுப்பு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிஆணையை மீண்டும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று இந்த பிடி ஆணை உத்தரவை வழங்கியுள்ளது. விஜய் மல்லையாவுடன் சேர்த்து பண மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள கிங்பிஷர் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலருக்கும் இந்த பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 14-ம் தேதி மல்லையாவின் பண மோசடி குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. மல்லையாவுடன் மேலும் 9 அதிகாரிகள் பெயரையும் இந்த வழக்கில் சேர்த்திருந்தது. கிங்பிஷர் நிறுவன முன்னாள் நிதி அதிகாரி ஏ.ரகுநாதன், மற்றும் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் அதிகாரிகள் அகர்வால், துணை நிர்வாக இயக்குநர் ஓவி பந்துலு, செயல் இயக்குநர் எஸ்கேவி ஸ்ரீனிவாசன் மற்றும் நிர்வாக இயக்குநர் பிகே பாத்ரா ஆகியோர் பெயர்களையும் இந்த குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை சேர்த்திருந்தது.

கிங்பிஷர் நிறுவனத்தின் செயல்பாடுகள் மோசமாக இருந்த நிலையிலும், வங்கி விதிமுறைகளுக்கு புறம்பாக ஐடிபிஐ ரூ.950 கோடி அளித்துள்ளது என்று அமலாக்கத்துறை கூறியிருந்தது. மேலும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிதிநிலை, எதிர்மறை சொத்து மதிப்பு மற்றும் கடன் விகிதம் அதிகரிப்பு மற்றும் கடன் வாங்கும் நிறுவனத்தின் தர மதீப்பிடு குறைவாக இருப்பது போன்ற காரணங்கள் இருந்த நிலையிலும் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர். இதன்மூலம் மல்லையாவின் நிதி மோசடிக்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். மல்லையாவின் நடத்தை குறித்து ஐடிபிஐ அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என்றும் கூறினர்.

குற்றப்பத்திரிகை அறிக்கையில் மல்லையாவின் அனைத்து குற்றங்களையும் விரிவாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கத்துறையின் அறிக்கையில் கடன் தொகை மூன்று பகுதியாக பிரித்து அளிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளது. குறுகிய கால கடனாக முதலில் ரூ.150 கோடி, இரண்டாவது கட்டமாக ரூ.200 கோடி மூன்றாவதாக ரூ.700 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் முன்னாள் தலைவர் யோகேஷ் அகர்வாலை மல்லையா சந்தித்த அடுத்த நாளில் முதல் குறுகிய கால கடன் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையை லீஸ், வாடகை மற்றும் பல்வேறு போலி காரணங்கள் உருவாக்கி இந்தியாவுக்கு வெளியே கொண்டு சென்றுள்ளார் என்றும் அமலாக்கத்துறை தனது குற்றப் பத்திரிகையில் கூறியுள்ளது.

கிங்பிஷர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பார்முலா 1 நிறுவனத்துக்கு ரூ.50 கோடியும் மற்றொரு துணை நிறுவனத்துக்கு ரூ.100 கோடி மாற்றப்பட்டுள்ளதையும் அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in