Published : 09 Jul 2017 12:34 PM
Last Updated : 09 Jul 2017 12:34 PM

சக்கர நாற்காலிக்கு ஜிஎஸ்டி வரி ஏன் விதிக்கப்பட்டிருக்கிறது?

சக்கர நாற்காலிக்கு மட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னால் இருக்கக்கூடிய உண்மையான காரணம், இந்த உபகரணங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்பதுதான்.

இப்படி சொல்வது ஒரு பெரிய முரண் போலத் தோன்றக்கூடும். ஆனால் இதன் பின்னால் இருக்கும் வரி விதிகளைப் பற்றி தெரியவந்தால் இந்தத் தவறான எண்ணம் அகலும்.

அபரிமித உடல் எடையைக் குறைக்கும் பேலியோ டயட் என்கிற உணவு முறையைப் போன்றதுதான் இந்த வரி விதிப்பும். இந்த முறையில் 130 கிலோவுக்கு மேல் எடை இருந்தவர்கள் கொழுப்பை உண்ணத் தொடங்கி மூன்று நான்கு மாதங்களிலேயே தங்கள் எடையை 90-80 கிலோவுக்கு இறக்கியிருக்கிறார்கள் என்பது யதார்த்தம். அதைப் போலவே, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் இந்த 5% வரியும், அந்தப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்காக விதிக்கப்பட்டதுதான். பேலியோ பற்றி எப்படிப் பெரும்பாலோருக்குத் தெரியாதோ அதைப் போலவே இதைப் பற்றியும் பெரும்பாலோருக்குப் புரியவில்லை.

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இந்த சாதனங்கள் எல்லாம் முறைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுபவை. இங்கே இடி இடித்தது அங்கே மின்னல் வெட்டியது எனவே விலையை ஏற்ற வேண்டியதாகிவிட்டது என்கிற ஓட்டல் கொள்ளை போன்றதல்ல.

இத்தனை நாட்கள். மாநில அரசு வரியே விதிக்காமல், மனிதாபிமானத்துடன் விலக்கு அளித்து இருந்த பொருட்களுக்கு வரி விதித்து இருப்பது, அதுவும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியமாய் விளங்கக்கூடிய பொருட்களுக்குப் போய், மத்திய அரசு வரி விதித்து இருப்பது கொடுமை. அதை நியாயப்படுத்துவது அதைவிடக் கொடுமை என்பது போல மேலோட்டமா க தோன்றலாம்.

மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் இதுவரை இதற்கு வரி விதித்ததில்லை என்பதே உண்மை. வரியே விதிக்காமல் இருந்த பொருளுக்கு வரியை விதித்துவிட்டு உதவுகிறோம் வசதிசெய்து கொடுக்கிறோம் என்று எவர் கூறினாலும் ஏற்றுக்கொள்ளச் சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் இதன் பின்னால் இருக்கும் வரி விதிப்பின் அடிப்படையைப் புரிந்துகொண்டால் அப்படித் தோன்றாது.

இறுதிப் பொருளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தால் அதைத் தயாரிப்பதற்கான எந்த கச்சாப் பொருட்களுக்கும் கிரெடிட் எடுக்க இயலாது என்பது பொது விதி.

அவ்வளவுதானே, இவற்றைத் தயாரிக்கும் கச்சாப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளித்துவிடவேண்டியதுதானே என்கிற கேள்வி எழுவதும் இயற்கைதான். ஆனால் இது ஏன் சாத்தியமில்லை என்று பார்ப்போம்.

உதாரணமாக, சக்கர நாற்காலி தயாரிப்பதற்கான கச்சாப் பொருட்களான இரும்பு முதலானவை, இவற்றுக்கு மட்டுமே பயன்படுவதில்லை. இதர வர்த்தகப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுபவை. அவற்றுக்கு எப்படி வரி விதிக்காமல் இருக்க முடியும்.

ஆகவே, சக்கர நாற்காலி தயாரிப்பதற்கு தேவைப்படும் இரும்புக்கு ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிகளைக் கிரெடிட் எடுத்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றால் இவற்றின் மீது வரியை விதித்தாக வேண்டும். எனவேதான் 5% வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இரும்புக்கு 18% வரி. இரும்பின்றி சக்கர நாற்காலி தயாரிக்க முடியாது. ஆனால் சக்கர நாற்காலிக்கு வரி விலக்கு அளித்தால், வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களைத் தயாரிக்கப் பயன்பட்ட அடிப்படைப் பொருளான இரும்புக்குக் கட்டப்பட்ட 18% ஜிஎஸ்டி-யை கிரெடிட் எடுக்க முடியாமல் போய்விடும். வரி இல்லாத பொருட்களுக்கு வரியைக் கிரெடிட் எடுக்க இயலாது என்கிற அடைப்படை விதியையும் மீறாமல் அதே நேரம் மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமமும் கொடுக்காமல் இருப்பதற்காகதான் இந்த 5% வரி விதிப்பு.

இந்த 5% வரியைக் கட்டுவதன் மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 18% கிரெடிட் எடுத்துக்கொள்ள முடிவதால், 18%-5% = 13% கிரெடிட் அவர்களுக்கு உபரியாகக் கிடைக்கிறது. அது இந்த உபகரணங்கள் தயாரிப்பதற்கான அடக்க விலையைக் குறைக்க உதவும் அல்லவா. ஆகவே ஜிஎஸ்டி-க்கு முன்னால் இருந்ததைவிட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்தியேக சாதனங்களின் விலை கண்டிப்பாகக் குறையவே செய்யும். ஆகவே இந்த சாதனங்களைத் தயாரிப்பவருக்கும் சிரமமில்லை, பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிக்கும் விலை குறைவதால் மகிழ்ச்சிதான்.

18% கட்டப்பட்ட இரும்பு முதலான கச்சாப் பொருட்களுக்கான வரியை கிரெடிட் எடுத்துக்கொண்டு 5% ஜிஎஸ்டி வரியைச் செலுத்த பயன்படுத்திக் கொண்டாலும் மீதமாகும் 13% கிரெடிட், லெட்ஜரில் அல்லவா ஏறிக்கொண்டே போகும். கம்ப்யூட்டரில் இருக்கும் கிரெடிட்டால் யாருக்கு என்ன பயன் என்கிற கேள்வி எழுவது இயற்கைதான்.

இதனால்தான், Inverted Duty Structure அதாவது எங்கெல்லாம் உள்ளீட்டு (இன்புட்) பொருட்களுக்கான வரி அதிகமாகவும் இறுதிப் பொருட்களுக்கான வரி குறைவாகவும் இருக்கிறதோ அங்கெல்லாம், அந்தந்தப் பொருட்களின் தயாரிப்பாளர் மட்டும், தம்மிடம் தேங்கியிருக்கும் கிரெடிட்டுக்கு ரீபண்ட் வாங்கிகொள்ளலாம் என்கிற வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி தயாரிப்பவர், தாம் எடுத்துக்கொண்ட 18% கிரெடிட்டில், ஜிஎஸ்டி வரி 5% செலுத்தியது போக . மீத 13% கிரெடிட்டை ரீபண்டு கேட்டு திரும்பப் பணமாக்கிக் கொள்ளலாம் என்கிற வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

அப்படியெனில், சக்கர நாற்காலிகளுக்கு 5% என்று முதலிலேயே அறிவிக்கவில்லை. கடும் எதிர்ப்பு வந்தபின்தானே 5% என்று அறிவித்து இருக்கிறார்கள் என்கிற கேள்வி எழுவதும் யதார்த்தம்தான்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடிப்படை நோக்கமே ரெவின்யூ நியூட்ரல் என்பதுதான். ரெவின்யூ நியூட்ரல் என்பது என்னவென்றால், ஏற்கெனவே வெவ்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த வெவ்வேறு வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வரியாக ஆக்குகையில், அதுவரை வசூலிக்கப்பட்டுக் கொண்டிருந்த வரி, புதிய வரியில் கூடிவிடவும் கூடாது. குறைந்துவிடவும் கூடாது. இந்த அடிப்படையில்தான், 18% கிரெடிட் எடுத்துகொண்டு 18% செலுத்த முதலில் ரெவின்யூ நியூட்ரலாக அறிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான சாதங்களின் விலையைக் குறைக்கவேண்டும் என்பதற்காகவே 18% பிறகு 5% ஆகக் குறைக்கப்பட்டது.

ஆகவே, மாற்றுத் திறனாளிகளின் நலத்தை மனதில் கொண்டே, அவர்களுக்கு அத்தியாவசிய சாதனங்களான சக்கர நாற்காலி போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 5% விதிக்கப்பட்டிருக்கிறது.

(கட்டுரையாளர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையில் மூத்த நுண்ணறிவு அதிகாரி.)

madrasdada@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x