

பலவிதமான வரிகளை நீக்கிவிட்டு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறுகிய காலத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது வளர்ச்சி உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக பிட்ச் மேலும் கூறியிருப்பதாவது: முன்பு ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விதமான வரி விதிப்பை கையாண்டன. தவிர மத்திய அரசு வரிவிதித்தது. ஜிஎஸ்டி காரணமாக மறைமுக வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படிருக்கிறது. இது உற்பத்திக்கு வழி வகுக்கும். ஜிஎஸ்டி காரணமாக நீண்ட கால அடிப்படையில் நாட்டின் ஜிடிபி உயரும்.குறுகிய காலத்தில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் சில சிக்கல்கள் இருக்கக்கூடும்.
நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்பட்டிருப்பதால் உற்பத்தித் துறைக்கு சாதகமாக இருக்கும். இதன் மூலம் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவது எளிமையாக இருக்கும். மாநில சுங்கச்சாவடிகளில் இனி லாரிகள் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. எளிமையான போக்குவரத்து இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் கிடங்குகளை வைத்திருக்க தேவையில்லை. நிறுவனங்களின் வசதிக்கேற்ப ஒரே இடத்தில் வைத்துக்கொள்லலாம்.
மேலும் புதிய முறையில் வரிதாக்கல் செய்வதும் எளிதாகும். இதற்கு குறைவாக நேரமே எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக வரித்தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும். 20 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் இருக்கும் சிறு நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்குள் வரத்தேவையில்லை. முன்பு இந்த வரம்பு ரூ.1.50 கோடியாக இருந்தது.
பெரும்பாலான சிறிய ரீடெய்ல் வர்த்தகர்கள் வரியை ஏய்ப்பதற்கான சூழல் மிகவும் குறைவு. இதன் மூலம் பெரும்பாலான சிறு வணிகர்கள் முறைப்படுத்தப்பட்ட வியாபாரத்துக்குள் வருவார்கள். இந்தியாவில் முறைப்படுத்தப்படாத வணிகம் ஜிடிபியில் 20 சதவீத பங்கு வகிக்கிறது. மொத்த வேலைவாய்ப்பில் 80 சதவீதம் முறைப்படுத்தப்படாத பிரிவில் இருந்தே உருவாக்கப்படுகிறது. இந்த பிரிவு பெரும்பாலும் வரி வரம்புக்குள் இல்லை என்பதால், அரசாங்கத்தில் வருவாய் மிகவும் குறைவாக இருக்கிறது.
மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் சில பிரச்சினைகள் இருக்கக்கூடும். வரி தாக்கல் பரிசீலனைகள் மற்றும் கூடுதல் தொகையை திரும்ப வழங்குவதில் காலதாமதம் ஆகலாம். அதேபோல ஒவ்வொரு பொருளுக்கு ஒவ்வொரு வகையான வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் இதில் பிரச்சினைகள் உருவாகலாம் என பிட்ச் தெரிவித்துள்ளது.