Published : 25 Jul 2017 10:54 AM
Last Updated : 25 Jul 2017 10:54 AM

தொழில் முன்னோடிகள்: லாரி எலிசன் (1944)

என் வாழ்க்கை ஒரு சுய த்ேடல், என் திறமைகளின் எல்லைகளை அறிந்து கொள்ளும்  த்ேடல்- லாரி எலிசன்

``நீ எங்கள் மகனில்லை.”

அம்மா லிலியன், அப்பா லூயி இருவரும் தன்னிடம் சொன்னதைக் கேட்டு அந்தப் பனிரெண்டு வயதுச் சிறுவன் திடுக்கிட்டான். கொஞ்ச நேரம் கதறி அழுதபின் கேட்டான், “என் அப்பா, அம்மா யார் ?”

அவர்கள் சொன்னார்கள். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசித்த ஃப்ளாரென்ஸ் ஸ்பெல்மான் என்னும் யூதப் பெண், தன் பதினாறாம் வயதில் ஒரு இத்தாலிய விமான ஓட்டியோடு காதலில் விழுந்தார். கர்ப்பமானார். காதலர் காணாமல் போனார். அவன், அவர்கள் குழந்தை.

மகனை வளர்ப்பதில் ஃப்ளாரென்ஸுக்கு விருப்பம் இருக்கவில்லை. ஒன்பதாம் மாதத்தில் அவனுக்கு நிமோனியா நோய் வந்தது. தன் அத்தை லிலியனுக்கு மகனைத் தத்துக் கொடுத்துவிட்டு அம்மா காணாமல் போய்விட்டார். அவன் அப்பா பெயரையும் அவர்களிடம் சொல்லவில்லை.

லியனும், லூயியும் ``பழமையானதும், மோசமானதுமான சேரி” என்று வர்ணிக்கப்படும் சிகாகோவின் தெற்குப் பகுதியில் வசித்தார்கள். வறுமையான வாழ்க்கை. 24 x 7 திருட்டுக்கள், கற்பழிப்புகள், கொலைகள் நடக்கும் குற்ற பூமி. பள்ளிக்கூடம் போனான். படிப்பு ஏறவில்லை. தண்டச் சோறு என்று அப்பா எப்போதும் திட்டுவார். தான் உதவாக்கரைதான் என்று அவனும் முடிவு கட்டிவிட்டான். ஒரே ஆறுதல், அம்மா காட்டிய அன்பும், தந்த அறிவுரைகளும்தான்.

பள்ளியில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல மதிப்பெண் வாங்குவான். மற்றபடி சுமார் மாணவன்தான். மேற்படிப்புக்காக இல்லினாய் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தான். இரண்டாம் வருடம் படிக்கும்போது வளர்ப்பு அம்மா மரணமடைந்தார். கையில் பணமில்லை, வளர்ப்பு அப்பாவின் உதவியில்லை. படிப்பைப் பாதியில் விட வேண்டிய கட்டாயம். சிறு இடைவெளிக்குப் பின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தான். அங்கேயும், வறுமையால், ஒரே செமஸ்டரோடு படிப்பை விடவேண்டி வந்தது.

அப்போது 1970 காலகட்டம். கம்ப்யூட்டர்கள் பரவலாகப் பயன்படத் தொடங்கியிருந்தன. புரோகிராமிங் தெரிந்தவர்களுக்கு உடனே வேலை கிடைத்தது. கோர்ஸ் படிக்க நோ மணி. அவன் ஒரு வழி கண்டுபிடித்தான், எங்காவது புரோகிராமராகச் சேரவேண்டும், அங்கே தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கும் முன்னால், ஏதாவது வேலை வேண்டும். சிலிக்கான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் கலிபோர்னிய மாநிலத்தில்தான் பல கம்ப்யூட்டர் கம்பெனிகள் இருந்தன. சிகாகோவை விட்டு அங்கே போனான். சின்னச் சின்னக் கம்பெனிகளில் கிடைத்த வேலைகளில் சேர்ந்தான். வயிற்றுப்பாட்டை ஓட்டினான். ஆனால், அவன் இலக்கு புரோகிராமர் வேலையில்தான் இருந்தது. கேட்டாரைத் திருப்திப்படுத்தும் நாவன்மை அவனுக்கு உண்டு. இந்தத் திறமையால், அம்தால் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தில் சேர்ந்தான். அவனுக்கு கற்பூர புத்தி. “நான் அதுவரை கம்ப்யூட்டர் பற்றியே படித்ததில்லை. ஒரு புத்தகத்தைப் படித்தேன். புரோகிராம் பண்ணத் தொடங்கிவிட்டேன்” என்கிறான் இந்தச் சுயம்பு லிங்கம்.

இந்த அனுபவம் அடுத்த அடி எடுத்துவைக்க வழி செய்தது. ஆம்பெக்ஸ் கார்ப்பரேஷனில் சேர்ந்தான். அவர்கள் சென்ட்ரல் இன்வெஸ்டிகேட்டிங் ஏஜென்சி (CIA – Central Investigting Agency) என்னும் அமெரிக்க உளவுத்துறையின் தகவல்களை நிர்வகிக்கும் பணியை அவுட்சோர்ஸிங் முறையில் செய்துகொண்டிருந்தார்கள்.

1970. ஐபிஎம் கம்பெனியில் வேலை பார்த்த எட்கர் காட் என்னும் கம்ப்யூட்டர் மேதை, தகவல்களைச் சேமிக்கவும், நிர்வகிக்கவும், சுலபமானதும், அதிகச் செயல்திறன் கொண்டதுமான ரிலேஷனல் டேட்டாபேஸ் ( Relational Database) என்னும் முறையைக் கண்டுபிடித்தார். பலரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஒரு தங்கச் சுரங்கம் ஒளிந்திருக்கிறது என்று லாரியின் மனக்குறளி சொன்னது. தன் வருங்காலத்தையே இதனோடு இணைத்துக்கொள்ள முடிவெடுத்தார்.

லாரி எப்போது தடாலடி முடிவுகள் எடுப்பவர். இந்தத் தீர்மானமும் அப்படி எடுக்கப்பட்டதுதான் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை, அவர் கம்ப்யூட்டர் யுகத்தின் வருங்காலத்தைச் சரியாகக் கணித்த தீர்க்கதரிசி என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள். கடும் போட்டிகள் நிறைந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உலகில் லாரி இன்று வரை, 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்டுவரும் வெற்றிகள் அவர் தீர்க்கதரிசிதான் என்பதை நிரூபிக்கின்றன.

1977. ரிலேஷனல் டேட்டாபேஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சொந்த கம்பெனி தொடங்க முடிவெடுத்தார். 2,000 டாலர்கள் தேவை. அவர் மொத்தச் சேமிப்பே வெறும் 1,200 டாலர்கள், இரண்டு நண்பர்களைப் பங்காளிகளாகச் சேர்த்துக்கொண்டார். டெவலப்மெண்ட் லேபரட்டரீஸ் என்னும் கம்பெனி பிறந்தது. முதல் வருடமே, லாரி தன் சாஃப்ட்வேரை அறிமுகம் செய்தார். அவர் இந்த சாஃப்ட்வேருக்கு வைத்த பெயர் ஆரக்கிள். இதற்கு இரண்டு காரணங்கள்.

1. ஆம்பெக்ஸ் கார்ப்பரேஷனில், சென்ட்ரல் இன்வெஸ்டிகேட்டிங் ஏஜென்சிக்கு லாரி செய்த புராஜெக்டின் பெயர் ஆரக்கிள்.

2. நம் ஊர்க் கோவில்களில் ``சாமி வந்து” ஆடுபவர்களைப் பார்த்திருப்பீர்கள். பக்தர்களின் கேள்விகளுக்கு இவர்கள் அருள் வாக்காகப் பதில் சொல்லுவார்கள். இந்தச் சாமியாடிகளை ஆங்கிலத்தில் ஆரக்கிள் என்று சொல்வார்கள். இதேபோல் கஸ்டமர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் சாஃப்ட்வேர் என்பது இன்னொரு பெயர்க் காரணம்.

அப்போது கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் பலவித சாஃப்வேட்களை பயன்படுத்தினார்கள். ஒன்றின் சாஃப்ட்வேர் இன்னொன்றுக்கு ஒத்துப்போகாது. புது சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு இரண்டு பாதைகள் – முதல் வழி, தனிப்பட்ட கம்ப்யூட்டர் தயாரிப்பாளருக்காக சாஃப்ட்வேர் தயாரிக்கலாம். அவர்கள் பிசினஸ் நிச்சயம் கிடைக்கும். இரண்டாம் வழி, எல்லா கம்ப்யூட்டர்களுக்கும் பொருத்தமான சாஃப்ட்வேர் அறிமுகம் செய்யலாம். இந்த வழி கொஞ்சம் ரிஸ்க்கானது. எல்லோருமே வாங்கலாம், அதே சமயம், யாரும் வாங்காமலே போகலாம்.

இந்த முடிவு வருங்காலத்தையே பணயம் வைக்கும் ஆட்டம். லாரி ரிஸ்க் எடுத்தார். அவர் களத்தில் இறக்கிய ஆரக்கிள் எல்லோரும் பயன்படுத்துவது. பங்காளிகள் இருவரும் தொழில்நுட்பத்தைக் கவனித்துக்கொள்ள, லாரி மார்க்கெட்டிங் பொறுப்பில். அவர் வேகமும், விடாமுயற்சியும் இப்போது வெளிப்பட்டன. சில கஸ்டமர்களைக் குறி வைப்பார். திரும்பத் திரும்ப அவர்களைத் தொடர்புகொண்டு நச்சரிப்பார். ஆர்டர் கிடைக்கும்வரை அவர்களை விடமாட்டார். தரமான சாஃப்ட்வேர், தீவிரமாகத் துரத்தும் சேல்ஸ் படை. ஆரக்கிள் சாஃப்ட்வேர் அமோக வெற்றி கண்டது.

1977 – இல் ரிலேஷனல் சாஃப்ட்வேர், 1982 – இல் ஆரக்கிள் கார்ப்பரேஷன் என்று இரண்டு பெயர் மாற்றங்கள். ஆனால், ராட்சச வளர்ச்சி தொடர்கிறது. புதிய தொழில்நுட்பங்களை அடையாளம் காண்பதில் அவர் கில்லாடி. கிளவுட் கம்ப்யூட்டிங்(Cloud Computing) என்னும் தகவல் சேமிப்பு முறையின் பயனை ஆரம்பத்திலேயே அவர் கணித்தார். இதேபோல், அவர் குறைந்த விலைக்கு வாங்கிய பீப்பிள் சாப்ட், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், நெட்சூட் (NetSuite) ஆகிய நிறுவனங்கள் ஆரக்கிளின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பலங்கள்.

தன் பாதையில் லாரி சந்தித்த எதிரிகள் சாதாரணமானவர்களல்ல, ஐ.பி.எம், மைக்ரோசாப்ட் ஆகிய பிரம்மாண்டங்கள். லாரி அவர்களைக் கண்டு பயப்பட்டதே கிடையாது. அது மட்டுமில்லை. அவர்களைத் துச்சமாகப் பேசுவார். மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் உலகின் கடவுளாக மதிக்கப்படுபவர். அவரைப் பற்றி லாரி என்ன சொன்னார் தெரியுமா? ‘‘தன்னை எடிசன் என மக்கள் மதிக்கவேண்டும் என்று பில் கேட்ஸ் நினைக்கிறார். பணக்காரர்கள் எல்லோரும் புத்திசாலிகளில்லை.” இப்படி விமர்சிக்கும் துணிச்சலும், தலைக்கனமும் லாரிக்கு மட்டுமே இருக்கமுடியும். ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் இதே குணங்கள்தாம். அதனால்தானோ என்னமோ, இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். லாரியின் நான்காம் திருமணத்தின்போது போட்டோகிராபர் ஸ்டீவ்தான்!

வறுமையில் பிறந்து வளர்ந்த லாரி இன்று உலகின் ஏழாவது பெரும் பணக்காரர். அவர் சொத்து 61 பில்லியன் டாலர்கள். (சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்). வருமானத்தில் ஒரு சதவீதத்தைச் சமூக சேவைகளுக்குச் செலவிடுகிறார். அதே சமயம். ஆடம்பரச் செலவுகளுக்கும் குறைவில்லை. ஹவாய் அருகே 2,000 கோடி ரூபாய்க்கு, 140 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ஒரு முழுத் தீவை விலைக்கு வாங்கியிருக்கிறார். இது தவிர, 23 மாளிகைகள், ஜப்பானில் தோட்டம், இரண்டு ஜெட் விமானங்கள், கணக்கில்லா கார்கள்…..தெரிந்தவை இவை. தெரியாதவை என்னென்னமோ? அனுபவி ராஜா அனுபவி. நீ உன் மூளையாலும், உழைப்பாலும் சம்பாதிச்ச பணம்!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x