

நள்ளிரவு ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பிரதமர் மோடி பேசும் போது ஜிஎஸ்டி வரியை முன்னிட்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வருமான வரி பற்றி குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
பிரதமர் மோடி பேசிய போது, “உலகில் ஏதாவது ஒரு விஷயம் புரிந்து கொள்ள கடினமானது என்றால் அது வருமான வரிதான் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார், இப்போது நம் பல்தரப்பட்ட வரியைப் பற்றி அவர் என்ன தெரிவித்திருப்பார் என்பதை யோசிக்க ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது என்ன?
மேற்கோள் விசாரணை என்ற ‘கோட் இன்வஸ்டிகேட்டர்’ தரவுகளின்படி, ஐன்ஸ்டீன் தனது வரிக் கணக்காளர் லியோ மேட்டர்ஸ்டார்ப் என்பவரிடம் இவ்வாறு வருமான வரி பற்றிக் கூறியுள்ளார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு டைம் இதழில் மேட்டர்ஸ்டார்ப் ஐன்ஸ்டீன் தன்னிடம் வருமானவரி பற்றிக் கேட்டதை கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
“நான் ஒருமுறை ஐன்ஸ்டீனின் பிரின்ஸ்டன் வீட்டுக்குச் சென்றிருந்தேன், அவரது வருமானவரிக் கணக்கைத் தயாரிக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் உயிருடன் இருந்தார், என்னை மதிய உணவுக்காக அழைத்தார். அப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஐன்ஸ்டீன் என்னிடம், “உலகில் புரிந்து கொள்ள மிகக் கடினமான விஷயம் வருமான வரிகள்” என்றார். நான் பதில் கூறினேன்: இதைவிடவும் ஒரு விஷயம் கடினமானது, அது உங்கள் சார்புத்துவ கோட்பாடு (theory of relativity) என்றேன். உடனே அவர் மறுத்து சார்புத்துவக் கோட்பாடு எளிதானது என்றார். அதற்கு ஐன்ஸ்டீனின் மனைவி ‘ஆம் உங்களுக்குச் சுலபம்தான்’ என்று ஐன்ஸ்டீனிடம் தெரிவித்திருந்தார்” என்று கணக்காளர் அந்தச் சம்பவத்தை மீண்டும் கடிதத்தில் நினைவு கூர்ந்தார்.
நீண்ட காலமாக ஐன்ஸ்டீனின் வருமானவரிக் கருத்து பற்றிய பல்வேறு கருத்துக்கள் உலவி வந்தன. தற்போது இந்திய நாடாளுமன்றம் வரை அது ஜிஎஸ்டி-இன் போது வந்துள்ளது.