Published : 06 Mar 2017 09:42 AM
Last Updated : 06 Mar 2017 09:42 AM

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பி.எப். தொகையை 15 சதவீதமாக உயர்த்த தொழிலாளர் நல அமைச்சகம் திட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) இருக்கும் தொகையில் 10 சதவீத தொகை தற்போது பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதனை 15 சதவீதமாக உயர்த்த தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பாக பி.எப். அறங்காலவர் குழு கூட்டத்தை விரைவில் கூட்ட தொழிலாளர் அமைச்சகம் முடிவெடுத்திருக்கிறது.

‘‘இதுவரை 10 சதவீத தொகையை அதாவது 17,000 கோடி ரூபாய் பங்குச்சந்தை சார்ந்த இடிஎப்களில் முதலீடு செய்திருக்கி றோம். இதனை 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். இன்னும் 10 முதல் 12 நாட்களில் பி.எப். அறங்காவலர் குழுவைச் சந்திக்க இருப்பதாக’’ தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

பங்குச்சந்தையில் இதுவரை செய்யப்பட்டுள்ள முதலீடுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. இந்த அளவை உயர்த்துவதற்காக பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். நிதி அமைச்சகத்தின் ஆலோசனைக்கு பிறகு இடிஎப்களில் முதலீடு செய்ய முடிவெடுத்தோம். இப்போது அதற்கு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன என்று தெரிவித்தார்.

பி.எப். தொகைக்கான வட்டி 8 சதவீதத்துக்கு மேல் வழங்குவதில் நிதி அமைச்சகத்துக்கு மாற்று கருத்து இருக்கிறது என்னும் செய்தியாளர்களின் கேள்விக்கு, இடிஎப் முதலீடுகள் நல்ல வருமானத்தை கொடுத்து வருவதால் 8.65 சதவீதம் வழங்க முடியும் என அமைச்சர் கூறினார்.

கடந்த 2014-15-ம் ஆண்டில் பி.எப். தொகையை பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய நிதி அமைச்சகமும், தொழிலாளர் துறை அமைச்சகமும் முடிவெடுத்தன. அப்போது 5 முதல் 15 சதவீதம் வரை இடிஎப்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக பி.எப். அமைப்புக்குள் வரும் தொகையில் 5 சதவீதம் இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இடிஎப்களில் முதலீடு செய்யும் தொகை 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

நிதி ஆண்டு வட்டி விகிதம்?

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பி.எப். வட்டி விகிதத்தை 8.7 சதவீதமாக மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயம் செய்தது. ஆனால் பி.எப். அறங்காவலர் குழு 8.8 சதவீதத்துக்கு ஒப்புதல் வழங்கியது. விதிமுறைகளின்படி நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் பி.எப். வட்டி விகிதத்தை அறங்காவலர் குழு நிர்ணயம் செய்ய முடியாது.

இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கு 8.65 சதவீத வட்டியை பி.எப். அறங்காவலர் குழு நிர்ணயம் செய்தது. ஆனால் இதுவரை நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் முடிவு செய்யவில்லை. இந்த வட்டி விகிதம் தொடர்ந்து வழங்க முடியுமா என நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x