என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை

என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை
Updated on
2 min read

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவ னர் பிரணாய் ராயின் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரணாய் ராய் தனது ஆர்ஆர்பிஆர் என்ற நிறுவனத்துக் காக இந்தியா புல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.500 கோடி கடனாக பெற்றார். முதலீட்டாளர்களிடம் இருந்து 20 சதவீத பங்குகளை வாங்குவதற்காக இந்த கடன் பெறப்பட்டது. இந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்காக ஆண்டுக்கு 19 சதவீத வட்டிக்கு ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ரூ.375 கோடியை பிரணாய் ராய் கடனாக பெற்றார். மேலும் இந்த கடனுக்காக என்டிடிவி நிறுவன பங்குகளை ஐசிஐசிஐ வங்கியில் பிரணாய் ராய் அடகு வைத்ததாக கூறப்படுகிறது.

ஒரு நிறுவன பங்குகளை (ஓட்டு ரிமை பங்குகளை) 30 சதவீதத் துக்கு மேல் வங்கியில் அடமானம் வைத்தால் அதை செபிக்கு தெரி விக்க வேண்டும். ஆனால் 61 சதவீதத்துக்கு மேல் அடகு வைத்த பிரணாய் ராய் அதை தெரிவிக்கா மல் இருந்தது வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்படி விதிமீறல் என சிபிஐ தெரிவித்துள்ளது. இதேபோல் எந்தவொரு தனியார் வங்கியும், ஒரு நிறுவனத்தின் பங்குகளை 30 சதவீதத்துக்கு மேல் அடமானமாக வைத்திருக்க முடியாது.

இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.48 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா மற்றும் மோசடிக்கு உடந் தையாக இருந்ததாக ஐசிஐசிஐ வங்கியின் சில அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக டெல்லி மற்றும் டேராடூனில் உள்ள பிரணாய் ராய்க்கு சொந்தமான வீடு உள்பட 4 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ எஸ்.பி சுஜித் குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து என்டிடிவி வெளி யிட்ட அறிக்கையில், ‘‘பழைய பொய்யான குற்றச் சாட்டுகளை அடிப்படையாக வைத்து சிபிஐ இந்த சோதனையை நடத்தியுள் ளது. பேச்சுரிமை மற்றும் ஜனநாய கத்தை நசுக்கும் வகையில் நடத்தப்படும் இத்தகைய சோதனைகளை கண்டு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். இதற்கு எதிராக நிச்சயம் போராடுவோம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் என்டிடிவியின் இந்த குற்றச்சாட்டுகளை சிபிஐ செய்திதொடர்பாளர் வன்மையாக மறுத்துள்ளார். சட்டப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சிபிஐ நடத்திய இந்த சோதனையில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் தெரிவித்துள்ளார். ‘‘ஊடகங்களில் இருப்பவர்கள் என்ன தவறு செய்தாலும், அதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா?. சிபிஐ-க்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்தான் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்’’ என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

என்டிடிவி பங்கு கடும் சரிவு

என்டிடிவி நிறுவனர்கள் வீடு களில் சோதனை நடந்ததை அடுத்து என்டிடிவி பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன. வர்த்தகத்தின் இடையே 7 சதவீதம் வரை சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 4.16 சதவீதம் சரிந்து 59.85 ரூபாயில் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in