

ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து ‘தி இந்து’ நடத்தும் ஆட்டோ மொபைல் வாகன கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. சென்னை பெருநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் ஹீரோ, யமஹா, கவாசகி உள்ளிட்ட நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள், பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகான், டொயோடா, ஃபியட், ரெனால்ட், ஹுண்டாய், ஸ்கோடா, இஸுசு உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் இடம்பெற்றன.
புதிய வாகனங்கள் அறிமுகம்
ஹீரோ நிறுவனத்தின் சார்பில் ஹீரோ கிளாமர் 125 சிசி பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹீரோ நிறுவன தயாரிப்புகளான மாஸ்ட்ரோ எட்ஜ், டூயட், பிளஸர் ஆகிய 3 ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், பார்வையாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன
கண்காட்சிக்கு இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிகளவு வருகை தந்தனர். நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய மற்றும் ரேஸ் பைக்குகள் இளைஞர்களை அதிகம் கவர்ந்தன. குறிப்பாக, டுகாட்டி, டிராம்ப் கவாசகி, யமஹா போன்ற ரேஸ் பைக்குகளை விரும்பி பார்வையிட்டனர். தாங்கள் விரும்பிய பைக் மற்றும் காருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இந்திய தயாரிப்பில் உருவான டிசி அவந்தா கார் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
உயர் ரக கார்கள்
பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் சொகுசு மற்றும் உயர் ரக கார்களும் கண்காட்சியில் இடம்பெற்றன. அதேசமயம், நடுத்தர குடும்பத்தினருக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையிலான கார்களும் இடம்பெற்றன. பலர் குடும்பத்துடன் வந்து கார்களில் அமர்ந்து காரின் சிறப்பம்சம், பயன்பாடு மற்றும் விலை போன்றவற்றை கேட்டறிந்தனர்.
‘தி இந்து’ அரங்கு
கண்காட்சியில் ‘தி இந்து’ புத்தக அரங்கு இடம்பெற்றுள்ளது. அங்கு ‘தி இந்து’ பதிப்பில் வெளிவந்துள்ள புத்தகங்கள் 10 சதவீத விலை தள்ளுபடியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள், பிசினஸ் லைன், யங் வேர்ல்டு ஆகியவற்றிற்கு சிறப்பு சலுகையில் ஆண்டு சந்தா செலுத்தும் வசதியும் உள்ளது.
மார்ச் 25, 26 ஆகிய இரு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும். காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். நுழைவு கட்டணமாக ரூ.30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டணம் கிடையாது.
கண்காட்சியைத் தொடங்கி வைத்து கார்களைப் பார்வையிடும் சென்னை பெருநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ்.