Published : 26 Dec 2014 12:23 PM
Last Updated : 26 Dec 2014 12:23 PM

விமான கட்டணங்களுக்கு வரம்பு நிர்ணயம்? - அதிகபட்சம் ரூ.20,000 நிர்ணயம் செய்ய பரிசீலனை

விமான கட்டணங்களுக்கு (எகனாமி வகுப்புகளுக்கு) அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வரம்பு நிர்ணயம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்வது வருகிறது. இதன் மூலம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வாங்குவது அல்லது அதிக தள்ளுபடி கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து திடீரென ரத்தானதால் பயணிகள் அவதியுற்றனர். கடைசி நேரத்தில் மற்ற விமான நிறுவனங்களுக்கு பயணிகள் சென்ற போது அவர்கள் அதிக கட்டணம் வசூலித்தார்கள்.

இதனால் எகனாமி வகுப்பு பயணிகளுக்கு அதிகபட்சம் டிக்கெட் விலையாக ரூ.20,000 நிர்ணயம் செய்வது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் பரிசீலனையில் ஈடுபட்டுவருகிறது. இதன் மூலம் பல காரணங்களுக்காக இறுதி நேரத்தில் பயணம் செல்பவர்களிடம் அதிக கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க முடியாது. அதேபோல அதிக தள்ளுபடியும் கொடுக்க முடியாது.

போட்டியை சமாளிக்க சில விமான நிறுவனங்கள் அதிக தள்ளுபடி கொடுக்கிறார்கள். இதன் காரணமாக அந்த நிறுவனங்களின் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், அவர்கள் வசூலிக்கும் கட்டணம் அந்த பயணத்தின் செயல்பாட்டு செலவுகளுக்கு கூட ஈடாகாது என்றும் அரசு கருதுகிறது.

இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில், வருங்காலத்தில் மேலும் சில நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட முடியாமல் கூட போகலாம். இதனால் ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் செலவுகளை (பிரேக் ஈவன்) விமான நிறுவனங்களிடம் விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டிருக்கிறது.

இதில் லாபத்தை இணைத்து குறைந்த பட்ச கட்டணமாக நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. எந்த நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குவதை மத்திய அரசு விரும்பவில்லை.

மேலும் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு செல்லும்போது அதிக கட்டணம் இருப்பதாக பயணிகள் புகார் செய்திருக்கிறார்கள். பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமான எகனாமி வகுப்புகளுக்கு அதிகபட்சம் 20,000 ரூபாய் விதிக்கப்படலாம் என்றும் விமான நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.

மேலும் இந்த துறையை வளர்ப்பதற்கு நிதிச்சலுகைகள் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x