

காப்பீட்டு திட்டத்தை அதிகளவு மக்களிடையே கொண்டு செல்லவும், அதற்கான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் ஜன் பீமா யோஜனா என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ) தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார்.
அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்கான ஜன் தன் யோஜனாவை அறிமுகம் செய்ததுபோல, அனைவருக்கும் காப்பீடு கிடைக்க ஜன் பீமா யோஜனாவை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மும்பையில் நடந்த பிக்கி அமைப்பின் 16-வது காப்பீட்டு மாநாட்டில் விஜயன் தெரிவித்தார்.
ஜன்தன் யோஜனா மூலம் இதுவரை 6 கோடி மக்க ளுக்கு வங்கிக்கணக்கு தொடங்கப் பட்டிருக்கிறது. காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதமாக உயர்த்தி யதால் காப்பீட்டு துறையின் வளர்ச்சி 1.7 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இருந்தாலும் 3.9 சதவீத வளர்ச்சி போதாது என்றார்.
ஏற்கெனவே காப்பீடு இன்னும் பிரபலமாகாத நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் 2.5 கோடி நபர்கள் புதிதாக வேலையில் இருப்பார்கள். இந்த துறையில் இன்னும் தேவை இருக்கிறது. அந்நிய முதலீட்டை 26% உயர்த்தியதன் மூலம் இதுவரை இந்த துறை வெற்றிகரமாகவே இயங்கி இருக்கிறது.
பல நிறுவனங்கள் இங்கு வந்தார்கள், தொழில்நுட்பம் நமக்கு கிடைத்தது. மேலும் இந்தியாவுக்கு வரும் முதலீடுகளை சட்டபூர்வமாகவும், ஒழுங்குமுறை அமைப்புகளின் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி கேட்டதற்கு, அந்நிய முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த இப்போது 3.9 சதவீத மக்களுக்கு கிடைத்திருக்க்கும் காப்பீடு இரு மடங்காக (7.2%) அதிகரிக்கும் என்றார். மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது ஏஜென்ட்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 10000 ரூபாயாவது வழங்க வேண்டும். அப்போதுதான் ஏஜென்டுகள் பாதுகாப்பாக உணருவார்கள் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.