Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

21 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்

தொடர்ந்து முன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் முடிவடைந்ததன. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 21000 புள்ளிகளுக்கு கீழே வீழ்ந்து 20925 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 6250 புள்ளிகளுக்கு கீழே சென்று 6237 புள்ளியில் முடிவடைந்தது.

நவம்பர் 21-ம் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி இதுவாகும். நவம்பர் 21-ம் தேதி 406 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்தது.

காரணம் என்ன?

இந்திய சந்தைகள் சரிய பல காரணங்கள் இருக்கிறது. முதலாவது முதலீட்டாளரின் மனநிலை. தொடர்ந்து லாபத்தை வெளியே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் நவம்பர் மாத பணவீக்க எண்கள் அதிகமாக இருக்கும் என்பதாலும், அதிகமாக இருக்கும் பட்சத்தில் வரும் டிசம்பர் 18-ம் தேதி நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சமும் இந்திய சந்தைகள் சரிவதற்கு இன்னொரு காரணம்.

மேலும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தன்னுடைய 85 பில்லியன் டாலர் ஊக்க நடவடிக்கையை அடுத்த வாரத்தில் குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதாலும், இந்திய சந்தைகள் சரிந்தன.

உலக சந்தை நிலவரம்

இந்திய சந்தைகள் மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகள் வியாழன் அன்று சரிந்தன. ஜப்பான் சந்தையான நிக்கி 1 சதவிகிதத்துக்கு மேலே சரிந்தது. கோஸ்பி, ஷாங்காய் காம்போசிட், ஹேங்செங் உள்ளிட்ட முக்கிய ஆசிய சந்தைகள் அனைத்தும் சரிந்தன. இதேபோல ஐரோப்பாவின் முக்கிய சந்தைகளும் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கின. வர்த்தகத்தின் ஆரம்பத்தில் 2 மாத குறைந்தபட்ச புள்ளிகளுக்கு ஐரோப்பிய சந்தைகள் சரிந்தன.

ரூபாயும் சரிவு

ஃபெடரல் ரிசர்வ் ஊக்க நடவடிக்கைகள் குறைக்கும் என்கிற அச்சம் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வியாழன் அன்று சரிவை சந்தித்தது. வர்த்தகத்தின் முடிவில் 57 காசுகள் சரிந்து, ஒரு டாலர் 61.81 ரூபாயாக முடிந்தது.

சென்செக்ஸ் 24000!

தனியார் செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் கருத்து கணிப்பில் அடுத்த வருட தேர்தலுக்கு பிறகு மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் அதிகபட்சமாக 24000 புள்ளிகள் வரை செல்லும் என்று தெரிய வந்திருக்கிறது.

டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன. அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் பங்கு 4 சதவிகிதத்துக்கு மேலே சரிந்தது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக பணம் ஈடுபட இருப்பதால் நடுத்தர காலத்தில் இந்த நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி இருக்க வாய்ப்பு இருக்கக்கூடும் என்ற காரணத்தால் இந்த பங்கு சரிந்தது.

மாறாக டாடா பவர், ஹெச்.சி.எஃப்.சி. கெயில் இந்தியா மற்றும் என்.டி.பி.சி. ஆகிய பங்குகள் உயர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x