Last Updated : 26 Feb, 2016 03:46 PM

 

Published : 26 Feb 2016 03:46 PM
Last Updated : 26 Feb 2016 03:46 PM

பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம்: ஜேட்லி

2015-16 பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து பேசியபோது பால் உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது என்றார்.

முக்கிய அம்சங்கள்:

உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5 சதவீதமாகும்.

உலக பால் உற்பத்தி வளர்ச்சி 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.ஆனால் இந்தியாவில் வளர்ச்சி 6.2 சதவீதமாகும்.

1991-ம் ஆண்டு தனிநபருக்கு நாள் ஒன்றுக்கு கிடைத்த பாலின் அளவு176 கிராம். இது 2014-15-ம் ஆண்டு 322 கிராமாக அதிகரித்துள்ளது.

முட்டை மற்றும் மீன் உற்பத்தியிலும் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

2015-16-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் மீன் உற்பத்தியில் ஏற்றம் காணப்பட்டுள்ளது. இது 4.79 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2015-16-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

இந்திய வேளாண்மை முறைமையில் பயிர் - கால்நடை பின்னிப்பிணைந்துள்ளது.

வேளாண் வருவாயில் கால்நடை வளர்ப்பு ஒர் அங்கமாக உள்ளது. வேலைவாய்ப்பு, உரம், உழவுத் தொழிலுக்கான உதவி ஆகியவற்றை இது வழங்குகிறது. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக பால் உற்பத்தியில் 18.5 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. 2014-15-ம் ஆண்டில் உற்பத்தி அளவு 146.3 மில்லியன் டன்னை எட்டியது. இது 2013-14-ம் ஆண்டில் 137.69 மில்லியன் டன்னாக இருந்தது. இதனால் 6.26 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில் 765 மில்லியன் டன்னாக இருந்த உலக பால் உற்பத்தி 2014-ம் ஆண்டு 779 மில்லியன் டன்னாக அதிகரித்தது என்று ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உயர்வு 3.1 சதவீதமாகும்.

இந்தியாவில் தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு உயர்ந்துள்ளது. 1990-91-ல் நாள் ஒன்றுக்கு கிடைத்த பாலின் அளவு 176 கிராமாகும். இது 2014-15-ம் ஆண்டு 322 கிராமாக அதிகரித்தது. 2013-ம் ஆண்டு உலக சராசரியான 294 கிராமைவிட அதிகமாகும். பால் மற்றும் பால் பொருள் உற்பத்தியில் தொடர்ந்து வளர்ச்சிக் காணப்படுவதை இது எடுத்துரைக்கிறது. கிராமப்புறங்களில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதில் பால் பண்ணை முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.

பால் சேகரிப்பு, எடுத்துச் ​செல்லுதல், பதனப்படுத்துதல், விநியோகம் ஆகியப் பணிகளை கூட்டுறவு முறையில் ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்துவதன் வாயிலாக பால்ப்பண்ணைத் துறையில் வெற்றி காணப்பட்டுள்ளது. மிகையான பாலை பால்பவுடர். பால் பொருட்களாக மாற்றுவதன் வாயிலாக பருவ மாற்றத்தின் போது ஏற்படும் குறைபாட்டை சரிகட்டுவதற்கு வழிவகுக்குகிறது. இதனால் பெறப்படும் லாபம் விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. இந்த முறைமையை மற்ற வேளாண் உற்பத்தித் துறைகளும் பின்பற்றுவது அவசியமாகும்.

கோழிப் பண்ணையை வர்த்தக ரீதியில் மேம்படுத்துவதற்கு உரிய கொள்கையை வரைவதில் அரசின் கவனம் உள்ளது. மேலும் குடும்ப அளவிலான கோழிப்பண்ணை முறையை வலுப்படுத்தும் முயற்சியையும் அரசு மேற்கொண்டுள்ளது. இது வாழ்வாதார பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் அமைகின்றன. முட்டை மற்றும் மீன் உற்பத்தியிலும் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

2014-15-ம் ஆண்டு முட்டை உற்பத்தி 78.48 பில்லியனாக இருந்தது. கோழிக்கறி உற்பத்தி 3.4 மில்லியன் டன்னாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன் வளர்ப்பு ஒருசதவீத பங்களிப்பை அளிக்கிறது. வேளாண்மைத் துறையின் ​மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 5.08 சதவீதமாகும். 2014-15-ம் ஆண்டு மீன் உற்பத்தி 10.16 மில்லியன் டன்னாக இருந்தது. 2015-16-ம் ஆண்டின் கடைசி காலாண்டிலும் உயர் வளர்ச்சி போக்கு காணப்பட்டது. இது 4.79 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த செயல்பாடுகளை பன்முகப்படுத்தும் பணியில் கோழி மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.

இவ்வாறு அருண் ஜேட்லி ஆய்வறிக்கை தகவல்களை பகிர்ந்து கொண்ட போது கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x