Published : 03 Jan 2014 01:16 PM
Last Updated : 03 Jan 2014 01:16 PM

காபி ஏற்றுமதி அதிகரிப்பு

சர்வதேச அளவில் தேக்க நிலை நிலவியபோதிலும் இந்தியாவின் காபி ஏற்றுமதி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013-ம் ஆண்டில் மொத்தம் 3.14 லட்சம் டன் காபி ஏற்றுமதியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 3.5 லட்சம் டன் காபி ஏற்றுமதியானது.

ஏற்றுமதியான காபியின் மதிப்பு ரூ. 4,728.86 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 4,637.87 கோடியாக இருந்தது.

சர்வதேச சந்தையில் அராபிகா, ரொபஸ்டா ஆகிய காபி ரகங்களில் விலை 30 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இதைக் கருத்தில் கொண்டு உடனடி காபித்தூள் (இன்ஸ்டன்ட் காபி) ஏற்றுமதியில் இந்தியா இறங்கியதால் ஏற்றுமதி அதிகரித்ததாக காபி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்ஸ்டன்ட் காபித்தூள் மறு ஏற்றுமதி 56 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 70,833 டன் ஏற்றுமதியாகியுள்ளது. முந்தைய ஆண்டு இது 45,457 டன்னாக இருந்தது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அராபிகா காபி மொத்தம் 55,082 டன் ஏற்றுமதியானது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் குறைவாகும். அதேசமயம் ரொபஸ்டா ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரித்து 1,65,087 டன்னாக இருந்தது.

இத்தாலிக்கு மிக அதிகபட்சமாக 77,041 டன் காபி ஏற்றுமதியானது. ஜெர்மனிக்கு 30,571 டன், ரஷியாவுக்கு 20,753 டன், பெல்ஜியத்துக்கு 17,431 டன் காபி ஏற்றுமதியானது.

அராபிகா காபி ரகம் ஒரு பவுண்ட் விலை 110 சென்ட்டுக்கு சர்வதேச சந்தையில் விற்பனையானது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் குறைவாகும். ரொபஸ்டா விலை 17 சதவீதம் சரிந்து ஒரு பவுண்ட் 75 சென்ட்டுக்கு விற்பனையானது. ஒரு டன் விலை ரூ. 1,50,297-க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு ஒரு டன் விலை ரூ. 1,51,938 ஆக இருந்தது. இந்தியாவில் காபி சீசன் என்பது அக்டோபர் முதல் செப்டம்பர் வரையாகும். இப்போது காபி பயிர் அறுவடை நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x