Published : 10 Dec 2013 09:40 AM
Last Updated : 10 Dec 2013 09:40 AM

வங்கி லைசென்ஸ்: நாடாளுமன்றக் குழு முட்டுக்கட்டை

நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதிக்கக் கூடாது என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. நிறுவனங்களையும், வங்கிகளையும் தனித்தனியேதான் பார்க்க வேண்டும் என்றும் இக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.

பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இப்பரிந்துரையை அளித்துள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற குழு இத்தகைய பரிந்துரையை அளித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ரிசர்வ் வங்கி, தனியார் நிறுவனங்கள் வங்கி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதனடிப்படையில் 26 நிறுவனங்கள் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்திருந்தன. இதில் விடியோகான், டாடா உள்ளிட்ட தொழில் குழுமங்கள் கடைசி நேரத்தில் இதிலிருந்து விலகின.

தொழில் குழுமங்களின் நிதி நிலை விவரங்கள் குறித்து ஆராய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தது. இக்குழு விண்ணப்பித்த நிறுவனங்கள் குறித்து பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் லைசென்ஸ் குறித்து ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு, நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கக் கூடாது என்றும், இதற்கேற்ப வழிகாட்டு நெறிகளை வகுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் பட்டியல் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எனத் தெரிகிறது.

வங்கி என்பது பொதுமக்களின் நிதியைக் கையாள்வதாகும், இதில் நிறுவனங்களை அனுமதிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி என்பது பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயம், எனவே இதில் தொழில் துறையினர் ஈடுபடுவதை அனுமதிக்கக் கூடாது என்றும், தொழில் வேறு, வங்கி நிர்வாகம் வேறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

32 பேரடங்கிய நாடாளுமன்ற நிலைக்குழு, தனது அறிக்கையில் உரிய மற்றும் வங்கித் தொழிலுக்கு ஏற்ற வகையிலானோரைக் கண்டறிந்து லைசென்ஸ் வழங்க வேண்டும். இவ்விதம் தனியார் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் அளிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் வங்கிக்கான பிரதான குறிக்கோளை எட்டுவதாக இல்லை. அது குழப்பமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இவ்விதம் குழப்பமான வழிகாட்டு நெறிமுறைகள் வழக்காடுதலுக்கு வழிவகுக்கும். மேலும் இதில் சார்புள்ளவர்களுக்கு சலுகை அளிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மிகவும் சுருக்கமான, ஒருங்கிணைந்த வகையில் வங்கிக்கான இலக்கை எட்டும் வகையிலான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் ஒரே சீரான வகையில் கொள்கை இருத்தல் அவசியம் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மேலும் இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வங்கி தொடங்குவதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ. 500 கோடி என்பதை ரூ. 1,000 கோடி என உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இது தவிர, விண்ணப்பித்த நிறுவனங்களை வெளிப்படைத் தன்மையுடன் எந்த விதமான சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x