

‘மண்ணில் போட்ட காசு வீணாகாது’ என்று பொதுவாகச் சொல்வார்கள். சொந்தமாக ஒரு வீடு வைத்திருப்பவர்கள்கூட முதலீடு என்ற பெயரில் மற்றொரு வீட்டை வாங்குவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். ஏற்கனவே முதல் வீட்டுக்கு வருமான வரிச்சலுகை பெற்றவர்களுக்கு இரண்டாவது வீடு வாங்கும் போதும் வரிச்சலுகை கிடைக்குமா, இரண்டாவது வீடு வாங்குவதற்கும் கடன் கிடைக்குமா என சந்தேகங்கள் எழுவது இயல்பு. ஆனால், இரண்டாவது வீட்டுக்கும் வங்கிக் கடன் மற்றும் வரிச்சலுகை கிடைக்கும் என்கின்றனர் வங்கித் துறையினர்.
பொதுவாக வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கும்போது, அந்த வீட்டில் குடியிருந்தால் ஓராண்டில் திரும்பச் செலுத்தும் வட்டியில் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். ஒருவேளை, அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் முழு வட்டிக்கும் வரி விலக்கு கிடைக்கும். வருமான வரிப் பிரிவு 80சி-யின் கீழ் அசலுக்கும் ஒரு ரூ.1 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம். இரண்டாவது வீடு வாங்கும் போது, அதற்கும் வரிச்சலுகை கிடைக்கும் என்கிறார் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன்.
ஒருவேளை முதல் வீட்டுக்கு வாங்கிய கடனை முழுவதுமாக அடைப்பதற்கு முன்பாகவே இரண்டாவதாக இன்னொரு வீடு வாங்கலாம். அதற்குப் பணம் போதுமானதாக இல்லை என்றால், குறையும் தொகையை வங்கியில் கடனாக வாங்கலாம் என்கிறார் கோபாலகிருஷ்ணன். ‘‘இரண்டாவது வீட்டுக்குப் புதிதாக வேறொரு வங்கியில் கடன் வாங்குவதற்குப் பதில் முதல் வீட்டுக்குக் கடன் வாங்கிய வங்கியிலேயே இரண்டாவது வீட்டுக்கும் கடன் வாங்குவது நல்லது. நம்மைப் பற்றிய முழு விவரங்களும் ஏற்கனவே அந்த வங்கிக்குத் தெரியும் என்பதால், சுலபமாகக் கடன் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தனியார் வங்கியை விடப் பொதுத்துறை வங்கிகளாக இருந்தால் இன்னும் நல்லது’’ என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
இரண்டாவது வீட்டுக்குக் கடன் வாங்கும் போது நம்மிடம் மார்ஜின் தொகை எவ்வளவு இருக்கிறது என்று வங்கிகள் பார்க்கும். உதாரணமாக, முதல் வீடு வாங்க மார்ஜின் தொகை 20 சதவீதமாக இருந்தால், இரண்டாவது வீடு வாங்கும்போது மார்ஜின் தொகை 30 சதவீதம் இருக்கிறதா என்று வங்கிகள் பார்க்கும். மேலும் இரண்டாவது வீடு ஒருவருக்கு அத்தியாவசியம் இல்லை. அதனால், இரண்டாவது வீட்டுக்கான கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்த முடியுமா என்றும் வங்கிகள் ஆராயும்.
எனவே இரண்டாவது வீடு வாங்க கடன் அளிக்க வங்கிகள் பெரும்பாலும் மறுப்பதில்லை. ஆனால், இரண்டாவது வீடு அத்தியாவசியம் இல்லை என்பதால் கடனைச் சரிவர திருப்பிச் செலுத்துவதில்லை என்றால், வீட்டை ஏலம் விடவோ அல்லது விற்கும் நிலையோ ஏற்படலாம் என்பதை மறந்துவிடக் கூடாது.