பயிர்களில் பரவும் நோய்கள்

பயிர்களில் பரவும் நோய்கள்

Published on

தமிழகத்தின் பருவகால சூழ்நிலை பயிர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட சாதகமான சூழலாக உள்ளது. இதனால், உளுந்து மற்றும் பாசிப்பயறு வகை பயிர்களில் மஞ்சள் தேமல் நோய், சாம்பல் நோய் மற்றும் பறவைக்கண் நோய் போன்றவைகளின் தாக்கம் வேகமாக பரவிவருகிறது. இதனால், உளுந்து மற்றும் பாசிப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பையா மற்றும் வேளாண் அலுவலர்கள் கூறியபோது, “உளுந்து மற்றும் பாசிப்பயிறு பயிர்கள் தற்போது பூக்கும் பருவத்தில் உள்ளதால் அதன் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 சதவிகித டிஏபி கரைசலை பூக்கும் பருவத்திற்கு முன்பும், பின்பு 15 நாள்கள் இடைவெளியில் இருமுறையும் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த டைமெத்தோயெட் 1 லிட்டர் தண்ணீரில் 1.7 மில்லி என்ற விகிதத்தில் கலந்து நடவு செய்த 30 நாள்கள் கழித்து பயிர்களில் தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தாவரங்களை அழித்துவிட வேண்டும். மேலும், வேப்ப எண்ணெய் 1 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

இது மட்டுமின்றி வயல்களில் ஆங்காங்கே பறவைகள் அமரும் வகையில் டி வடிவ கம்புகளை நட்டுவைத்தால் அதில் பறவைகள் அமர்ந்து பயிர்களைத் தாக்கும் புழுக்களைத் தின்று பயிர்களைக் காக்கும். விவசாயிகள் இம்முறைகளைப் பின்பற்றினால் பயிர்களை நோய் தாக்குதல்களிலிருந்து காத்து விவசாயிகள் அதிக மகசூல் ஈட்ட முடியும்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in