வெளிநாடுகளில் இந்தியர்களின் முதலீடு சரிவு

வெளிநாடுகளில் இந்தியர்களின் முதலீடு சரிவு
Updated on
1 min read

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகம் முதலீடு செய்கின்றன என்ற அபிப்ராயம் பரவலாக உள்ளது. இதற்கு இந்தியாவில் தொழில் கொள்கைகள் உகந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 2013-14-ல் முதல் அரையாண்டில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு பெருமளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த வகையில் கொள்கைகள் இல்லை என்று கூறப்படும் பரவலான குற்றச்சாட்டு தவறு என்று அசோசேம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வெளிநாடுகளில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 95.20 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் செய்த முதலீடு 340 கோடி டாலராகும். இத்துடன் ஒப்பிடுகையில் இந்திய முதலீடு குறைந்துள்ளது தெளிவாகப் புரியும் என்று அசோசேம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த முதலீடு 323 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட முதலீடு 229 கோடி டாலராகும்.

வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் இந்தியர்கள் முதலீடு செய்த தொகை 1.91 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்தியர்கள் செய்த முதலீட்டுத் தொகை 5.81 கோடி டாலராக இருந்தது.

இந்தியர்கள் மேற்கொண்ட நேரடி அன்னிய முதலீடானது 2012-13-ம் நிதி ஆண்டில் 713 கோடி டாலராக இருந்தது. முதலீட்டுக்காக இந்தியாவிலிருந்து சென்ற தொகை 200 கோடி டாலர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்தியர்கள் செய்த வெளிநாட்டு முதலீடு 178 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 291 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in