

ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடைபெற்ற மொத்த வர்த்தகம் 850 கோடி டாலராகும். இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதற்கு முக்கியக் காரணமாகும். ஆன்லைன் ஷாப்பிங் குறித்த ஆய்வறிக்கையை அசோசேம் வெளியிட்டது.
இதில் 2009-ம் ஆண்டு 250 கோடி டாலராக இருந்த ஆன்லைன் வர்த்தகம் 2011-ம் ஆண்டில் 630 கோடி டாலராக அதிகரித்தது. இது 2013-ம் ஆண்டில் 1,600 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தகம் 5,600 கோடி டாலர் அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த சில்லறை வர்த்தகத்தில் ஆன்லைன் வர்த்தகம் 6.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஆன்லைன் மூலமாக பொருள்களை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இது மிக சௌகர்யமாக உள்ளதாகக் கருதுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் பணம் செலுத்துவதற்கு பல்வேறு வகையான வாய்ப்பு, வசதிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ளதும் சாதக அம்சமாகும். பணவீக்க அதிகரிப்பு, பொருளாதார தேக்க நிலை ஆகிய எந்த பிரச்சினையும் ஆன்லைன் வர்த்தகத்தை பாதிக்கவில்லை என்று அசோசேம் தலைவர் டி.எஸ். ரவாத் தெரிவித்தார்.
மின்னணு பொருள்கள் தவிர, ஆடைகள், அணிகலன்கள், வீட்டுக்கு குறிப்பாக சமையலறை சாமான்கள், பிற உபகரணங்கள், கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், அழகு சாதனப் பொருள்கள், வாசனை திரவியங்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புக்கு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஆமதாபாத், கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் உள்ள 3,500 வர்த்தகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் மும்பைவாசிகள்தான் முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்த டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர். ஆர்டர் செய்யும் பொருள்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தரப்படுவது இதில் உள்ள சாதக அம்சமாகக் கருதப்படுகிறது. அதேபோல 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் பொருள்களைத் தேர்வு செய்யும் வசதி இருப்பது இதில் உள்ள சாதக அம்சமாகக் கருதப்படுவதாக டி.எஸ். ரவாத் கூறினார்.