

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வரும் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் 30 சதவீத அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வீடுகளின் விலை குறையும் என்றும் பிட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் கடுமையாகக் குறையும் என்றும், புதிய வீடுகளுக்கான தேவை குறைவாகவே இருக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
வரும் நிதி ஆண்டின் (2017-18) முதல் காலாண்டு முடிவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். இந்த நிலை இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு ஓரளவு மீட்சியடையும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் மூன்றாம் காலாண்டில் பண்டிகைக் கால சீசனாக இருப்பதால் புதிய வீடுகள் விற்பனை ஓரளவு இருக்கும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அரை சதவீதம் வரை குறைத்துள்ளன. இதனால் வீடு விற்பனை ஓரளவு மீள்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் 2016-17 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் விற்பனை 44 சதவீத அளவுக்குக் குறையும் என்று குறிப்பிட்டுள்ளது.
டெல்லியைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் வீடுகளின் விலை கடந்த 16 காலாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. மும்பையில் இது கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகும்.
நாட்டிலேயே ரியல் எஸ்டேட் துறையில் அதிக வருமானம் ஈட்டும் பகுதியாக என்சிஆர் பிராந்தியம் (தலைநகர் பிராந்தியம்) உள்ளது. பெருநகரங்களில் விற்பனை சரிந்துள்ள போதிலும் சென்னை, புணே ஆகிய நகரங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் கட்டுமான பணிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. பெரும் பாலான கட்டிட நிறுவனங்கள் தங்களது உள்வள ஆதாரங்கள் மூலம் ஊழியர்களுக்கு கூலி வழங்கு வது, மூலப் பொருள்களுக்கான தொகையை அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர். நிலைமை முழுமையாக சீரடையாத போதிலும் சில உள்ளூர் நிறுவனங்கள் நிலைமையை சமாளித்து வருகின்றன.
சிறிய கட்டுமான நிறுவனங்கள் புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கின்றன என்றும் பிட்ச் குறிப்பிட்டுள்ளது.