

பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமலேயே 9-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று முடிவடைந்தது. மேலும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜனவரி 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் 9-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த இரு நாட்களாக (ஜனவரி 3 மற்றும் 4) புதுடெல்லியில் நடைபெற்றது. ஜிஎஸ்டி அமைப்பில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்தது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒருமித்த கருத்து ஐஜிஎஸ்டிக்கு தேவை. மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் சேவைகள் பரிமாற்றத்தின் போது விதிக்கப்படுவதே ஐஜிஎஸ்டி.
முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாதிரி மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி ஆகிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மாநிலங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை இழப்பீடு தொகை வழங்குவதாக இருந்ததை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கும்படி ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றியமைத்தது.
ஜிஎஸ்டி அமல்படுத்து வதற்கான அட்டவணையை பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் அறிவிப்பில் அருண் ஜேட்லி அறிவிப்பார் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.