Last Updated : 26 Jan, 2014 10:23 AM

 

Published : 26 Jan 2014 10:23 AM
Last Updated : 26 Jan 2014 10:23 AM

சராசரியிலிருந்து மாறுபட்டு இருங்கள்: நவின்ஸ் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமார் சிறப்புப் பேட்டி

பல துறைகளைச் சேர்ந்த தலைவர்களை இதுவரை நாம் சந்தித்து அவர்களின் அனுபவத்தைக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்களை இந்தப் பகுதியில் சந்தித்ததில்லை. இந்த வாரம் கட்டுமானத் துறையில் 25 வருடங்களாக செயல்பட்டு வரும் நவின்ஸ் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமாரை சந்தித்தோம். அவருடைய ஆரம்பகால வாழ்க்கை, ரியல் எஸ்டேட் துறையின் தற்போதைய நிலைமை என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த விரிவான பேட்டியிலிருந்து.

நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோரா?

நாங்கள் நான்கு தலைமுறைகளாக சென்னையில்தான் இருக்கிறோம். ஆனால் எங்கள் வீட்டில் தொழில் தொடங்கியது நான்தான். சிவில் என்ஜினீயரிங் முடித்துவிட்டு எம்.எம்.டி.ஏ.யில் மத்திய நிலை மேலாளராக 14 வருடங்கள் வேலை பார்த்தேன். அதன் பிறகுதான் நவின் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

இப்போதைய நிலையில் தொழில் ஆரம்பிப்பதே கடினம். அதுவும் இல்லாமல் நீங்கள் நிலையான ஒரு வேலையில் பத்துக்கும் மேற்பட்ட வருடங்கள் வேலை செய்துவிட்டீர்கள். நீங்களே தொழில் தொடங்க காரணம் என்ன?

சமயங்களில் விதிகளுக்குப் புறம்பான கட்டிடங்களை இடிப் பதைப் பார்த்திருக்கிறேன். மேலும் அப்போதைக்குத் தரமில்லாத, அழகு உணர்ச்சி இல்லாமல், சரியான திட்டமிடல் இல்லாமல் பல கட்டிடங்களை நான் பார்த்திருக்கிறேன். நான் ஒரு சிவில் என்ஜீனியர், எனக்கு எப்படிக் கட்டலாம் என்பது ஓரளவுக்குத் தெரியும். அனுமதி வாங்குவது உள்ளிட்ட விஷயங்கள் தெரியும். மேலும் பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததால், நான் ஏன் பிஸினஸ் தொடங்க கூடாது என்று தோன்றியது. அதனால் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

உங்கள் வீடு மற்றும் நண்பர்களிடமிருந்து என்ன மாதிரியான ரியாக்ஷன் இருந்தது?

அவர்களைச் சம்மதிக்க வைப்பது கடினமாகத்தான் இருந்தது. நண்பர்கள் மற்றும் மேலதிகார்கள் ஏன் வேலையை விட வேண்டும் இதே வேலையை தொடர்ந்து கொண்டே பிஸினஸ் செய்யக் கூடாதா என்று கேட்டார்கள். அதனால் நிறுவனம் ஆரம்பித்து முன்று புராஜெக்ட்களை முடித்த பின்னர்தான் வேலையை விட்டேன். அப்போதும் கூட என் மேலதிகாரி இன்னும் கொஞ்சம் நாள் விடுமுறை தருகிறேன் என்றார் ஆனால் என் மனது முழுவதுமே பிஸினஸில் இருக்கிறது. அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று சொல்லி வேலையை விட்டுவிட்டேன். ஆனால் இதெல்லாம் எனக்கு பிரச்சினையாக இருந்ததே இல்லை.

அப்படியானால் உங்களுக்கு எதுதான் பிரச்சினை?

பிஸினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மட்டும் போதுமா. முதலில் அதற்கு பணம் வேண்டும், இடம் வேண்டும். அப்போதைய நிலையில் joint venture மிகவும் புதியது. இருந்தாலும் இதற்குப் பலர் சம்மதித்தார்கள். ஆனால் கொஞ்சமாவது பணம் கொடுத்தால்தான் அக்ரிமென்ட் போட முடியும் என்று சொல்லி விட்டார்கள். துபாயில் இருக்கும் என் நண்பர் பணம் அனுப்பினாலும் அது போதுமானதாக இல்லை.அதன் பிறகு நண்பர் ஒருவரைப் பிடித்தோம். அவர் என் மீது நம்பிக்கை வைத்து பணம் எதுவும் வாங்காமல் அக்ரிமென்ட் போட்டார். அந்த நம்பிக்கைதான் இன்று நவின்ஸ்.

அதன்பிறகு நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

நான் சந்திக்கும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதுவும் பல வகைகளில். சில பில்டகள் அனுமதிக்கப்பட்ட தளத்துக்கும் மேலே ஓரிரு தளம் அதிகமாக கட்டுவார்கள். இதனால் அவர்களால் குறைந்த விலைக்கு விற்க முடியும். ஆனால் என்னால் குறைந்த விலைக்குக் கட்டித்தர முடியாது.

அனுமதி வாங்கி, கட்டடம் பாதிக்கும் மேலே வளர்ந்திருக்கும் அப்போது வாடிக்கையாளர் வந்து சார், 'இங்க ஒரு பால்கனி கட்டிக்கொடுங்கள்' என்பார். சார், பால்கனிக்கு அனுமதி வாங்கவில்லை. அப்படி கட்ட முடியாது என்றால் மற்றவர்கள் கட்டிக்கொடுக்கிறார்களே என்பார். இன்னொரு பக்கம் வேலை செய்யும் மேஸ்திரி நமக்கு சாதகம் செய்வதாக நினைத்து அதிக மணலை கலப்பார். வேண்டாம் என்று சொன்னால் எல்லா இடங்களிலும் இப்படிதானே சார் என்று நமக்கு விளக்கம் கொடுப்பார்.

நாம் செய்யும் ஒவ்வொரு புதிய முயற்சிகளுக்கு இந்த சமூகம் ஒப்புக்கொள்ளாது மட்டும் இல்லாமல் இந்த உலகம் நம்மை மீண்டும் மீண்டும் ஒரு சராசரி ஆக்கவே முயற்சி செய்யும். நானும் மற்றவர்களை போல பிஸினஸ் செய்வதற்கு செய்யாமலே இருக்கலாமே.இதுவே எனக்கு மிகப்பெரிய சவால் இன்று வரைக்கும். எனக்கு மட்டுமல்லாமல் புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது இருக்கிறது. நீ ஏன் வேலைக்கு போக கூடாது மற்றவர்கள் மாறி இருக்கக் கூடாது என்பதால் இந்த சமூகம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். சராசரிகளிடமிருந்து விலகி இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

கட்டிட வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாக இருக்கிறார்களே?

ஆமாம். கல்வி, வேலை வாய்ப்புகள் பெருகிவிட்டதால் இந்த வேலைக்கு வருவதற்குப் பலரும் தயங்குகிறார்கள். அதைவிட பத்துவருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிகளவு கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. இந்த தொழிலுக்கு புதிய ஆட்கள் வராத சூழ்நிலையில், கட்டுமானத்தின் அளவும் அதிகரித்துகொண்டே செல்வதால் வெளியில் இருந்து ஆட்கள் வருவது தவிர்க்க முடியாதது.

நீங்கள் ஏன் இவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்றி அவர்களை ஒரு அமைப்புக்குள் கொண்டு வரும் பட்சத்தில் பல தொழிலாளர்கள் கிடைப்பார்களே! உங்களை போன்ற பெரிய நிறுவனங்கள்தான் இதை செய்ய வாய்ப்பு இருப்பதால் இதை கேட்கிறேன்?

ரியல் எஸ்டேட் துறையில் இது சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறேன். முதலில் நாங்கள் ஒரே இடத்தில் கட்டடிங்களை கட்டுவதில்லை. ஒரே சமயத்தில் பல வேலைகள், பல இடங்களில் செய்கிறோம். ஒரு வேலை வட சென்னையில் செய்வோம். இன்னொரு நாள் நகரின் மற்ற பகுதியில் செய்வோம். அந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி அருகில் இருக்கும் ஆட்களை வைத்துக்கொள்ள முடியும். ஒருவரை வேலைக்கு எடுத்து அடிக்கடி வேறு இடங்களுக்கு அவர்களை மாற்ற முடியாது. மேலும் அவர்களுக்கு 30 நாளும் வேலை கொடுக்க முடியாது. எங்களிடம் வேலை இருந்தால் செய்வார். அதே போல மற்ற நிறுவனங்களிடமும் அவர் வேலை செய்வார். இந்த தொழிலில் அது சகஜம். மேலும் பலர் விவசாயிகள். ஊரில் விவசாயம் பார்பார்கள். வேலை இல்லை எனில் இங்கு வருவார்கள். அதனால் இப்போதைக்கு அவர்களை ஒரு அமைப்புக்குள் கொண்டு வர வாய்ப்பு இல்லை.

பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் பட்ஜெட் வீடுகளை கட்டுவதில்லையே?

மனைகளின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கும் போது பட்ஜெட் வீடுகளை கட்ட முடியாது.கட்டினாலும் அது நடுத்தர மக்களுக்கு எட்டாமலே இருக்கும். இருந்தாலும் 30 லட்சம் ரூபாயிலிருந்து கோடிக்கு மேல் வரையிலும் கூட வீடு கட்டி வருகிறோம். இதில் இன்னொரு விஷயம் வரி. வீட்டு மனை வாங்குவதிலிருந்து ஆரம்பித்து அதை பதிவு செய்வது அனுமதி வாங்குவது என பல இடங்களில் வரிகள் செலுத்த வேண்டி இருக்கிறது.

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் பபுள் வந்தது. அதுபோல இந்தியாவிலும் வர வாய்ப்பு இருக்கிறதா?

அதுபோல இங்கு வர வாய்ப்பு இல்லை. வீடு, கடன், பணியாளர்கள், கம்பிகள், சிமென்ட் என பல துறைகள் சம்பந்தபட்டது ரியல் எஸ்டேட். இதை ஊக்குவிக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. விதிகளை நெறிப்படுத்தி, வரிச் சலுகளை கொடுத்து, வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். ஏனென்றால் ரியல் எஸ்டேட் தொழில் இந்திய பொருளாதாரத்தில் மல்டிபிள் எஃபக்டை உண்டாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x