

பார்தி இன்ஃபிராடெல் லாபம் ரூ. 277 கோடி
பார்தி இன்ஃபிராடெல் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 277 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 12 சதவீதம் அதிகமாகும்.
முந்தைய ஆண்டு நிறுவனத்தின் லாபம் ரூ. 248 கோடியாக இருந்தது.
இப்போதைய கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில் தொலைத் தொடர்புத் துறை ஸ்திரமான வளர்ச்சியை எட்டி வருவதாகத் தெரிகிறது.
3-ஜி நெட்வொர்க் அளிப்பதில் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருவதாக பார்தி இன்ஃபிராடெல் துணைத் தலைவர் அகில் குப்தா தெரிவித்தார்.
நிறுவனத்தின் டவர்களின் எண்ணிக்கை 82,476 ஆக இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 2.60 % சரிந்து 153.80 ரூபாயில் முடிவடைந்தது.
சிண்டிகேட் வங்கி லாபம் ரூ. 470 கோடி
சிண்டிகேட் வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 470 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 463 கோடியாகும்.
மொத்த வருமானம் 6.68 சதவீதம் உயர்ந்து ரூ. 4,850 கோடியாக இருக்கிறது. ஒரு பங்கின் வருமானம்(இ.பி.எஸ்) ரூ. 7.81 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இது ரூ. 7.70 ஆக இருந்தது.
இருந்தாலும் வங்கின் செயல்பாட்டு லாபம் 3.8 %சரிந்தது. அதேபோல மொத்த வாராக்கடனும் 2.47 சதவிகிதத்திலிருந்து 2.88 சதவிகிதமாக உயர்ந்தது.
நிகர வட்டி வரம்பு கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் 3.26 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது குறைந்து 2.89 சதவிகிதமாக இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் சிறிதளவு சரிந்து 73.20 ரூபாயில் முடிந்தது.
சுந்தரம் ஃபைனான்ஸ் லாபம் 10.8% உயர்வு
சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் நிகரலாபம் 10.8 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் ரூ 111 கோடி லாபத்தில் இருந்த இந்த நிறுவனம் இப்போது 123 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி இருக்கிறது.
கடந்த ஆறு மாதத்தில் கடன் கொடுக்கும் விகிதமும் கடந்த வருட முதல் ஆறு மாத காலத்துடன் ஒப்பிடும் போது 6.38 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நிறுவனத்தின் நிகர வாரக்கடன் 0.94 சதவிகிதமாக இருக்கிறது.
வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பது சவாலாக இருக்கிறது. இருந்தாலும் வளர்ச்சி மற்றும் லாப விகிதத்தில் கவனம் செலுத்துவோம் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.டி. ஸ்ரீனிவாசராகவன் தெரிவித்தார்.
வர்த்தகத்தின் முடிவில் 1.12 சதவிகிதம் உயர்ந்து 521.40 ரூபாயில் முடிவடைந்தது.
மாருதி: லாபம் மூன்று மடங்கு உயர்வு
இந்தியாவின் அதிக எண்ணிக்கையில் கார் உற்பத்தி செய்யும் மாருதி சுசூகி நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.670.23 கோடி லாபம் பெற்ற இந்த நிறுவனம், கடந்த வருட இதே காலாண்டில் 227.45 கோடி ரூபாய் மட்டுமே லாபம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட இதே காலாண்டில் ரூ 8,070 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருமானம் இப்போது ரூ.10,211 கோடியாக அதிகரித்திருக்கிறது.
செலவு குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் ரூபாய் சரிவு போன்றவை லாபம் அதிகரிக்க காரணம் என்று நிறுவனம் சொல்லி இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் சிறிதளவு உயர்ந்து 1,513 ரூபாயில் முடிவடைந்தது.