

உள்நாட்டு நிகர உற்பத்தி மற்றும் நுகர்வு, பொதுமக்களின் வாங்கும் சக்தி ஆகியவை அதிகரித்திருப்பது மற்றும் நிதிக் கொள்கையை தளர்த்துவது போன்ற காரணங்களால் நீண்ட காலத்திற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்வாக இருக்கும் என்று சர்வதேச நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமான மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது. இருப்பினும் பணவீக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் எனவும் மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
மார்கன் ஸ்டான்லி அறிக்கையின் படி, உள்நாட்டு தேவை இந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும் உள்நாட்டு நுகர்வு மற்றும் அந்நிய முதலீடு போன்ற காரணிகள் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பேரியல் பொருளாதார சூழ்நிலை கடந்த இரண்டு வருடமாக முன்னேற்றத்தில் உள்ளது. இருப் பினும் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியே இருக்கும்.
நுகர்வோர் விலை குறியீடு சார்ந்த பணவீக்கம் மிதமான நிலையிலேயே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அடுத்த மார்ச் மாதத்திற்குள் 4.5 சதவீதத்தை அடையும் என்று கருதுகிறோம். பணவீக்கத்துக்கு உண்டான காரணிகள் அனைத்தும் சாதகமாகவே இருக்கும். நிர்ணயித்துள்ள பணவீக்கத்தையே அடைவதற்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு மார்கன் ஸ்டான்லி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
2017-ம் ஆண்டு மார்ச் மாத காலாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. உணவு பணவீக்கம் மற்றும் பணவீக்க சூழ்நிலை இந்த கணிப்புக்கு சாதகமாக உள்ளன.
இந்த நிதியாண்டில் 0.50 சதவீத வட்டி குறைக்கப்படலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அக்டோபர் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கொள்கையில் கூறப்பட்டுள்ளதை வைத்து மார்கன் ஸ்டான்லி தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தனது இறுதி நிதிக் கொள்கை அறிவிப்பு கூட்டத்தில் பணவீக்கம் உயர வாய்ப்பு இருப்பதால் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்று அறிவித்தார்.