Last Updated : 21 Oct, 2013 04:24 PM

 

Published : 21 Oct 2013 04:24 PM
Last Updated : 21 Oct 2013 04:24 PM

நிதி திட்டமிடல்

இன்று நாம் பரவலாக கேட்கப்படுகிற ஒரு பெயர் பைனான்சியல் பிளானிங். நிறைய பணம் உள்ளவருக்கு மட்டும்தான் இது தேவை என்ற பரவலான ஒரு கருத்து உள்ளது. ஆனால் அது உண்மை அல்ல.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒருவர் சரியான வழியில் தம்முடைய நிதியைத் திட்டமிட்டுக்கொண்டால் இது போன்ற பெயர் கிடைக்க வாய்ப்பே இல்லை. நிதி நடவடிக்கைகள் ஒரு சிறந்த ஆலோசகரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்போது அவருடைய தரம் தானாக உயரும்.

நிதி திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்று. இன்று நம்முடைய ஆசைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஒருவருக்கு ஆசை எது, தேவைகள் எது என கண்டு கொள்ள முடிவதில்லை.

எனவே நமக்கு அவற்றை அறிந்து வழிநடத்த ஒரு நிதி ஆலோசகரின் உதவி தேவைப்படுகிறது.

நிதி ஆலோசகர்கள் நம்முடைய குடும்பத்தில் ஒருவர், அவர் நம்முடைய வாழ்க்கையில் நம்மோடு நீண்ட காலம் பயணம் செய்யப் போகிறவர் எனவே நாம் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிதி திட்டமிடல் என்பது ஆறு படிகள் கொண்டது

1. ஒருவரைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் பல்வேறு கேள்விகளைக் கேட்பதன் மூலம் கண்டறிவது.

2. ஒருவருடைய குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்கு.

3. தற்போதய நிதி நிலமை மற்றும் அவருடைய முதலீடு, மேலும் அவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மை முதலியவற்றை அறிந்து கொள்வது,

4. இலக்குக்கு ஏற்றார் போல முதலீட்டைத் தேர்தெடுப்பது.

5. ஒரு நிதித்திட்டம் தயார் செய்து அதைச் செயல்படுத்துவது.

6. அந்தத் திட்டம், இலக்குக்குத் தகுந்தபடி செயல்படுகிறதா என்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனிப்பது.

பெரும்பாலோர் சரியாக திட்டம் தீட்டுவார்கள் அல்லது நிதி ஆலோசகரிடம் திட்டத்தை வாங்கிக்கொள்வார்கள். ஆனால் திட்டம் போடும் போது இருக்கும் ஆர்வம் அதை செயல்படுத்தும் போது இல்லை, இதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது. செயலிலும், அதை கண்காணித்தலிலுமே ஒருவருடைய வெற்றி உள்ளது.

முதல் இரண்டு வருடங்களில் ஒருவருடைய நிதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கே நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. ஒரு வருடத்திற்கு பின்பே அவருக்கு எது தேவை எது தேவை இல்லை என்று கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கும்.

சிலர் விளையாட்டாக கேட்பார்கள் நாம் திட்டம் போட்டால் மட்டும் 100% நடக்குமா என்று? திட்டம் போட்டே ஒரு விஷயம் சரியாக நடக்கவில்லை என்று நினைத்தால், திட்டம் போடாமல் இருக்கும் போது எப்படி சரியாக இருக்க முடியும்.

மொபைல், டிவி மற்றும் இன்டர்நெட் மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திட்டங்களைக் கேட்க நேரிடுகிறது. இந்த மாதிரி விஷயங்களை நிதி ஆலோசகரிடம் விடுவதால் நாம் தப்பாக எதுவும் வாங்க முடியாது.

நம்முடைய பெற்றோர்களுக்கு நிதி திட்டமிடல் பற்றி எதுவும் தெரியாது அப்படி இருந்தும் அவர்கள் பெரும்பாலான இலக்கை அடைந்தார்கள், இப்பொழுது மட்டும் என்ன என்ற ஒரு கேள்வியும் பலருக்கு உள்ளது.

நம் பெற்றோர்கள் தேவை இல்லாமல் எதையும் வாங்கியது இல்லை, அதேபோல சமூகத்துக்காக மற்றவர்களுக்காகவும் வாங்கியதில்லை.

இன்றைய அவசர வாழ்க்கையில் ஒருவருக்கு எல்லா விதமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. மேலும் முந்தைய கால நிதி திட்டங்கள் பெரும்பாலும் பணவீக்கத்தைக் கூடக் கட்டுப்படுத்த முடியாததால் நாம் இன்றைய உலகின் புதிய நிதித் திட்டங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. இதை ஒரு நிதி ஆலோசகரிடம் விட்டுவிடுவதால் அவர் அதை சரிவர கண்காணிக்கிறார்.

இன்று நாம் EMI கலாசாரத்தில் வாழ்கிறோம். நாம் நமக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்கிறோம். மேலும் பொருளைக் கையகப்படுத்துவதில் முனைவதால் எவ்வளவு சம்பாதித்தும் போதவில்லை. எனக்கு தெரிந்த ஒருவர் கணவன் மனைவி இருவரும் ஏறக்குறைய மாதம் ரூ. 2.5 லட்சம் சம்பாதிக்கிறார்கள், இருந்தும் அவர்களால் ரூ. 20,000 க்கு மேல் சேமிக்க முடியவில்லை. ஏனெனில் அவரை வழிநடத்த யாரும் இல்லாததே. இதற்கு முக்கியக் காரணம், பணத்தை எப்படிக் கையாள்வது என்று யாருக்கும் பள்ளிக் கூடத்திலோ அல்லது வீட்டிலோ சொல்லித் தருவதில்லை.

இன்னும் சிறிது வருடங்களில் குடும்ப மருத்துவர் என்பது போல குடும்ப நிதி ஆலோசகர் என்று ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x