

பெரும்பாலான வல்லுநர்கள் வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் ரெபோ விகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. பண வீக்கம் குறித்து தெளிவான தகவல் கிடைக்க வேண்டும் மற்றும் பண மதிப்பு நீக்கம் எந்த அளவுக்கு பொருளாதாரத்தை பாதித்திருக்கிறது என்பதை மதிப்பிட வேண்டும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்தார்.
நிதிக்கொள்கை குழுவில் இருக்கும் ஆறு உறுப்பினர்களும் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டாம் என்ற முடிவு எடுத்ததாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ விகிதம்) 6.25 சதவீதமாக இருக்கிறது. தவிர ரிவர்ஸ் ரெபோ விகிதம் உள்ளிட்ட அனைத்து விகிதங்களிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை.
ஜிடிபி வளர்ச்சி
நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் இருக்கும். ஆனால் அதே சமயத்தில் அடுத்த நிதி ஆண்டு (2017-18) வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது.
பண மதிப்பு நீக்கம் காரணமாக சரிந்திருந்த நுகர்வோர் தேவை நடப்பு நிதி ஆண்டின் இறுதியில்தான் உயரும். அடுத்து ரொக்க வணிகம் நடக்கும் துறைகளாக ரீடெய்ல், உணவகம், விடுதிகள், போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் விரைவில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
கடந்த 2015 ஜனவரியில் இருந்து இதுவரை 1.75 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பு செய்யப் பட்டிருக்கிறது. தற்போது ரெபோ விகிதம் குறைக்கப்படவில்லை என்றாலும் கூட வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்க கூடும் என உர்ஜித் படேல் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை குறைத்த பிறகு பல வங்கிகள் வட்டி குறைப்பு செய்தாலும், ரிசர்வ் வங்கி குறைத்த அளவுக்கு வட்டியை குறைக்கவில்லை.
ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை கூட்டம் ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடக்க இருக்கிறது.
பங்குகள் சரிவு
வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்ததால் வங்கி பங்குகள் கடுமையாக சரிந்தன. அதிகபட்சம் 4 சதவீதம் வரை வங்கிப் பங்குகள் சரிந்தன. ஆனால் வர்த்தகம் முடிவில் வங்கி பங்குகள் உயர்ந்து சிறிய சரிவிலே முடிவடைந்தன.
வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிந்து 28289 புள்ளியிலும், நிப்டி 0.75 புள்ளிகள் உயர்ந்து 8769 புள்ளியிலும் முடிவடைந்தன. துறைவாரியாக பார்க்கும் போது எப்எம்சிஜி குறியீடு 0.39 சதவீதமும் வங்கி குறியீடு 0.37 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன. மாறாக கன்ஸ்யூமர் டியூரபிள் குறியீடு 2.8 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் கோல் இந்தியா, கெயில், எம் அண்ட் எம், லுபின் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன. மாறாக டாக்டர் ரெட்டீஸ், சன் பார்மா, ஹீரோ மோட்டோ கார்ப், ஆக்ஸிஸ் வங்கி மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.