

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு அறிவித்த திட்டங்களின் மூலமாக இதுவரை 45 லட்சாதிபதிகள் உருவாகி உள்ளனர். இந்த திட்டம் தொடங்கப்பட்டு மூன்று வார காலத்திற்குள் 45 பேருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள இந்தியா பேமெண்ட் கார்ப்பரேஷன் அமைப்பு ஒவ்வொரு வாரமும் 15 பயனாளிகளை தேர்ந்தெடுத்து 1 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று வாரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளை அறிவித்து வருகிறது.
கூடுதலாக 500 வணிகர்கள் மற்றும் 114 வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 6,500 பயனாளிகளுக்கு 10 ஆயிரம் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. மேலும் 15,000 மக்களுக்கு 1,000 ரூபாய் பரிசுத் தொகையை எலெக்ட்ரானிக் முறையில் வழங்கப்படுகிறது.
பரிவர்த்தனை எண்கள் மட்டுமே எங்களிடம் உள்ளன. பரிவர்த்தனை எண்களில் குறிப்பிட்ட எண்களை கம்ப்யூட்டர் தேர்வு செய்கிறது. இந்த தேர்வு முறை முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எங்களுடைய ஆடிட்டர்கள் முன்னிலையில் நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று இந்திய பேமெண்ட் கார்ப்பரேஷன் அமைப்பின் தலைமை திட்ட அலுவலர் எஸ்கே.குப்தா தெரிவித்துள்ளார்.
ஏப்ரலில் ரூ.1 கோடி பரிசு
ஒரு கோடி ரூபாய், 50 லட்ச ரூபாய் மற்றும் 25 லட்ச ரூபாய் ஆகிய மூன்று பரிசுகள் ஏப்ரல் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் குப்தா கூறினார்.
2016-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 14 தேதி வரை நுகர்வோர்கள் மற்றும் வணிகர்களின் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் இந்த திட்டத்தின் கீழ் பரிசு வெல்வதற்கு தகுதியானவையாகும். அதேபோல ரூபே கார்டு, பீம் செயலி மற்றும் ஆதார் மூலமான பண செலுத்தும் வாடிக்கையாளர்கள் தினந்தோறும் அறிவிக்கப்படும் பரிசு தொகை மற்றும் வாரந்தோறும் பரிசுத் தொகை வெல்வதற்கு தகுதியானவர்கள்.
பரிசு தொகையை வென்றவர்களில் மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.