Published : 02 Jan 2014 10:28 AM
Last Updated : 02 Jan 2014 10:28 AM

அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க விதிமுறைகளில் தளர்வு

அன்னிய நேரடி முதலீடுகளை (எப்டிஐ) ஈர்ப்பதற்காக விதிமுறைகள் மேலும் தளர்த்தப்படும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். தளர்த்தப்பட்ட புதிய விதிமுறைகள் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையிலான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனாலேயே கடந்த சில மாதங்களில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. தேக்க நிலையில் உள்ள பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. தொழில்துறையிலும் மீட்சி ஏற்பட்டு பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியப் பொருளாதாரமானது மிகவும் வலிமையானது. வெளிப்புற பாதிப்புகளால் பலவீனமடையாது. அது எதையும் தாங்கும் திறனுடையது என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் தொழிற்பேட்டைகள் (இண்டஸ்ட்ரியல் காரிடார்) அமைப்பதன் தொடக்கமாக டெல்லி-மும்பை இடையிலான காரிடார் அமைக்கப்பட உள்ளது.

இதில் பெருமளவிலான வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தொழில்நிறுவனங்கள் சர்வதேச அளவிலான தரத்தை எட்டும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சர்மா கூறினார். தேக்க நிலை நிலவிய போதிலும், வழக்கமாக ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளுக்கான சப்ளை குறைந்த போதிலும் புதிய சந்தைகளைக் கண்டறிந்ததில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என நம்புவதாக அவர் கூறினார்.

வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 8 மாதங்களில் 9,900 கோடி டாலராகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் பற்றாக்குறை 12,900 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதியாண்டில் எஞ்சியுள்ள மாதங்களில் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x