Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

அரக்கோணத்தில் எங்கு வாங்கலாம் மனை?

சென்னை மாநகரம் இன்று பிரமாண்டமாக விரிவடைந்து வருகிறது. சென்னையைத் தாண்டி அண்டை மாவட்ட எல்லைகளிலும் அதன் தாக்கம் தெரிகிறது. சென்னையின் தெற்கே வண்டலூர், கூடுவாஞ்சேரி எனச் செங்கல்பட்டு வரை வளர்ச்சி நீண்டுகொண்டிருக்கிறது. அதுபோலவே சென்னையின் வடக்கே திருநின்றவூர், திருவள்ளூர் தாண்டி அரக்கோணம், திருத்தணி வரையிலும் வளர்ச்சி காணப்படுகிறது.

சென்னையில் பெருகும் மக்கள் தொகை, நகரின் வளர்ச்சி காரணமாக வீடுகளின் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வீட்டு வாடகை நித்தமும் எகிறிக்கொண்டிருப்பதால் சொந்த வீடு வாங்கிச் சென்று விட வேண்டும் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. எனவே வங்கியில் கடனை வாங்கி, சென்னையின் புறநகர்ப் பகுதியிலாவது வீடு வாங்கி விட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். குறிப்பாகச் சென்னைக்கு வெளியே விரைவில் வந்து செல்லும் போக்குவரத்து வசதி வாய்ப்புள்ள இடங்களில் மனைகள் வாங்கி வீடு கட்ட மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இதன்காரணமாக, சென்னை புறநகரின் வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கிறது.

அந்தவகையில் வேலூர் மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியான அரக்கோணம் நகரம் சென்னை நகர மக்களின் விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது. எந்நேரமும் ரயில் போக்குவரத்து வசதி, குறைந்த விலையில் மனைகள் வாங்கவும் வீடுகள் கட்டவும் சென்னைவாசிகள் பலர் அரக்கோணத்தை விரும்புகின்றனர். அதுவும் எதிர்கால முதலீடாக இங்கு மனைகள் வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு சென்னைவாசிகளைக் குறிவைத்து ரியல் எஸ்டேட் பிளாட் (மனை) புரோமோட்டர்கள் மனைப்பிரிவுகளை அமைத்துக் குறைந்த விலை விற்பனை செய்து வருகின்றனர். மலிவான விலையில் மனைகள் விற்கப்படுவதால் அதை நம்பி ஏராளமானோர் மனைகள் வாங்குகின்றனர். ஆனால், வாங்கிய பிறகு அந்த மனை அமைந்திருக்கும் இடம், மனையின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுவும் செய்கின்றன. குறிப்பாக ரயில் நிலையம் அருகே, பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள மனை என விளம்பரம் செய்யப்பட்டு விற்பனையான பல மனைகள் விலை ஏற்றம் இல்லாமல் அப்படியே இருப்பதைக் காண முடிகிறது. இதற்குச் சில மனைப்பிரிவுகளுக்குச் சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

அப்படியானால் அரக்கோணம் பகுதியில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எந்தெந்தப் பகுதியில் வீட்டு மனைகளை நம்பி வாங்குவது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இதுபற்றி அரக்கோணத்தைச் சேர்ந்த ரயில் எஸ்டேட் பிரமோட்டர் தமீம் வழிகாட்டுகிறார்.

‘‘சென்னை மக்கள் புறநகர்ப் பகுதிகளில் 3 காரணங்கள் இருந்தால் மனை வாங்குவர். குடியிருப்புகள் அதிகம் இருக்கும் பகுதியாக இருக்க வேண்டும், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகில் இருக்க வேண்டும், சாலை வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அரக்கோணத்தைப் பொறுத்தவரை நகரத்தைச் சுற்றியுள்ள 6 கி.மீ தூரத்திற்குள் மனைகளை நம்பி வாங்கலாம். அரக்கோணம் - திருத்தணி சாலையில் தணிகைப்போளூர் வரையும் அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் தக்கோலம் கூட்ரோடு வரையும் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் கும்மினிப்பேட்டை வரையும் மக்கள் பயமின்றி மனைகள் வாங்கலாம். அதேபோல, திருத்தணி-அரக்கோணம் சாலையில் நகரத்தில் இருந்து 3 கி.மீ தூரம் வரை மனைகளை வாங்கலாம். இங்கு எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியும் அடைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வழித்தடங்களைத் தவிர வேறு முக்கியச் சாலைகளில் மனைகள் வாங்குவது சிறந்த முதலீடாக இருக்காது.

இப்போது அரக்கோணம் நகரமே வளர ஆரம்பித்துள்ளது. இதனால், இங்குள்ள மக்களே நகரத்தை ஒட்டிய பகுதியில் மனைகள் வாங்க ஆரம்பித்துவிட்டனர். திருத்தணி சாலை, காஞ்சிபுரம் சாலைகளை ஒட்டிய பகுதி, முக்கியச் சாலைகளில் இருந்து அடுத்துள்ள பகுதி என வகைப்படுத்தலாம். அப்படிப் பார்க்கும்போது குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.750 வரை சதுர அடி விலை போகிறது. மனைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள ஊர், அங்குள்ள வாழிடச் சூழ்நிலைகளைக் கவனித்து மனை வாங்க வேண்டும்.

சென்னையில் இருந்து வந்து அரக்கோணத்தில் மனைகள் வாங்க வேண்டும் என்றால் அரக்கோணத்திற்கு நேரடியாக வருவதே நல்லது. மிகவும் குறைந்த விலையில் மனை விற்பனை என்றால் வாங்கும் முன் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. அரக்கோணத்தை சுற்றிலும் சாலை வசதி இருக்கிறது. அதில் மனைப் பிரிவுகள் எந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது என்பதுதான் முக்கியம்’’ என்கிறார் தமீம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x