Last Updated : 29 Nov, 2013 12:00 AM

 

Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM

நலப்பொருட்கள் என்றால் என்ன?

தனியார் பொருட்கள் (Private Goods) மற்றும் பொது பொருட்கள் (Public Goods) இரண்டுமே நுகர்வோரின் வாங்கும் திறன் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. சில சமயம், அறியாமை அல்லது வறுமை காரணமாக, தனிமனிதர்களின் தெரிவுகள், அவர்கள் நலனுக்கும் சமூக நலனுக்கும் சாதகமானதாக இல்லாமல் போகலாம்; கல்வி, சுகாதாரம், உயிர் காக்கும் தடுப்பூசி, போன்ற மக்களின் சில அடிப்படை தேவைகள் தனியார் நிறுவனங்களால் குறைவாக வழங்கப்படலாம் அல்லது வழங்கப்படாமலேயே போகலாம் என்பதால், சமூக நலனுக்காக அரசே முன்வந்து வழங்கும் பொருள்கள், சேவைகளை நலப்பொருட்கள் (Merit Goods) என்றழைக்கிறோம்.

எந்த ஒரு நாட்டினுடைய சமூக நலத்திட்டங்கள், கொள்கைகள் வெகுவாக இந்த நல பொருட்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். உதாரணமாக, வறுமை அல்லது வசதியின்மை காரணமாக படிக்க வேண்டிய குழந்தைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்புகின்றார்கள் எனக்கொள்வோம். சமூகத்தின் மதிப்பு மற்றும் நலன் கருதி, அக்கல்வியினை அரசே வழங்கும்; கல்வியினை ஊக்குவிக்கும் வண்ணம் சீருடை, புத்தகம், மதியஉணவு போன்றவைகளையும் வழங்கினால் அவை அனைத்துமே நலப்பொருட்கள் ஆகும்.

அதாவது ஒரு அரசு தனது குடிமக்கள் சில அடிப்படைத் தேவைகளை கட்டாயம் பெற்றிருக்கவேண்டும், அவற்றைத் தேவையான அளவு நுகர வேண்டும் என்று கருதுகிறது; ஆனால் அந்த அடிப்படைத் தேவைகளை வசதியின்மை காரணமாக குடிமக்கள் பெற்றிருக்காத, நுகராத ஒரு சூழலில், அரசு தானே அத்தேவைகளை வழங்க முன்வரும்போது அதை நலப்பொருட்கள் என்கிறோம்.

தமிழக அரசின் பொது விநியோகம், சத்துணவு, பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான பாதுகாப்பு போன்ற பல சமூக நலத்திட்டங்கள், மத்திய அரசின் நூறு நாள் வேலைவாய்ப்பு, உணவு பாதுகாப்பு போன்ற திட்டங்கள் இந்த 'நலப்பொருள்கள்’ என்ற அடிப்படையில் அமைந்தவையே.

பொது நலனை குறைக்க கூடிய பொருட்களும் (Demerit Goods) உள்ளன; அவைகளை குறைக்க அரசு முன்வரும். உதாரணம்: 'குடி' வீட்டையும் நாட்டையும் கெடுக்கும் என்று அரசே விளம்பரம் செய்வது; மது, சிகரெட் போன்ற பொருள்களின் நுகர்வை குறைக்க வேண்டி அவற்றின் மீது அதிக வரி போடுவது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x