Published : 29 Mar 2017 09:25 PM
Last Updated : 29 Mar 2017 09:25 PM

ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்தால் பணவீக்கம் அதிகரிக்காது: அருண் ஜேட்லி தகவல்

நாடுமுழுவதும் ஒரே மாதிரி வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி மசோதாக்கள், நீண்ட இழுபறிக்கு பிறகு மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்தாலும் இப்போதுள்ள வரி விகிதமே தொடரும் என்றும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்க வகை செய்யும் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நடைமுறையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, 4 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது அருண் ஜேட்லி பேசியதாவது:

இதுவரை மத்திய அரசு வசூலித்து வந்த உற்பத்தி வரி, சேவை வரி மற்றும் கூடுதல் சுங்க வரி இனி இருக்காது. இதற்கு பதிலாக ஒரே வரி விதிக்க மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) மசோதா மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்க வகை செய்கிறது.

மாநிலங்களுக்கிடையே பரி மாறிக் கொள்ளப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மத்திய அரசு வரி விதிக்க ஒருங் கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) மசோதா வகை செய்கிறது. சண்டிகர், டாமன் டையூ உள்ளிட்டசட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களில் வரி விதிக்க யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (யுடிஜிஎஸ்டி) மசோதா வகை செய்கிறது.

இதுதவிர, ஜிஎஸ்டி அமல் படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை முதல் 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்டுவதற்காக, புகையிலை, சொகுசு கார் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு வரி மேலி வரி (செஸ்) விதிக்க ஜிஎஸ்டி இழப்பீட்டு மசோதா வழி வகை செய்கிறது.

ஜிஎஸ்டி வரி விகிதம் தொடர் பான அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப் படும். மாநில அரசுகளின் இறையாண்மையை காக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் முதன்முறையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் எஸ்ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற வேண்டி உள்ளது. அதன்பிறகு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் பண வீக்கம் அதிகரிக்கும் என சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இப்போதுள்ள வரி விகிதத்தை ஒட்டியே புதிய வரி விகிதம் இருக்கும். எனவே, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.12 லட்சம் கோடி இழப்பு

விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் வீரப்ப மொய்லி பேசும்போது, “கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பே ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்பியது. ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்வளவு காலம் தாமதமாகி உள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது”என்றார்.

4 மசோதாக்கள் நிறைவேற்றம்

நீண்ட விவாதத்துக்குhd பிறகு நிதி அமைச்சர் பதில் அளித்து பேசினார். இதையடுத்து, இந்த மசோதாக்கள் குரல் வாக்கு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாக்கள் மாநிலங்களவை யில் தாக்கல் செய்யப்படும். இவற்றை இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x