Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

முழு சாதக நிலை என்றால் என்ன?

முழு சாதக நிலை (Absolute advantage)

பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம் ஸ்மித் எழுதிய ‘An Enquiry into the Nature and Causes of the Wealth of Nations’ ( பதிப்பு: 1776) நூலில் கூறிய பல கருத்துகளில் மிக முக்கியமானது Absolute advantage (முழு சாதக நிலை). அவர் காலத்தில் நாடுகளுக்கிடையே வர்த்தகத்திற்கு பல தடைகள் இருந்தன. தங்கம் சேர்க்கவேண்டும், அதுவே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் சிறந்தது என்று எண்ணி ஒவ்வொரு நாடும் இறக்குமதிக்குத் தடை விதித்தும், ஏற்றுமதியை ஊக்குவித்தும் வந்தன. நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகம் இருந்தால் மட்டுமே செல்வம் பெருகும் என்பதை நிரூபிக்க Absolute advantage என்ற கருத்தை ஆடம் ஸ்மித் முன்வைக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் ஒரே அளவு உற்பத்தி காரணிகளைக் கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளும் அரிசி, கோதுமை என்ற இருபொருட்களை உற்பத்தி செய்கின்றன. எல்லா வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினால், இந்தியா ஒரு வருடத்திற்கு 200 மூட்டை அரிசி அல்லது 300 மூட்டை கோதுமையும் உற்பத்தி செய்ய, பாகிஸ்தான் 300 மூட்டை அரிசி அல்லது 200 மூட்டை கோதுமையும் உற்பத்தி செய்கின்றது.

இதில் இந்தியாவிற்கு கோதுமை உற்பத்தியில் Absolute advantage-ம் பாகிஸ்தானுக்கு அரிசி உற்பத்தியில் Absolute advantage-ம் இருப்பதைப் பார்க்கலாம்.

இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். இரு நாடுகளும் இரண்டு பொருட்களின் உற்பத்திக்கு சம அளவு உற்பத்திக் காரணிகளை செலவிட்டால், இந்தியா ஒரு வருடத்தில் 100 மூட்டை அரிசியும், 150 மூட்டை கோதுமையும் உற்பத்தி செய்யும், அதே போல் பாகிஸ்தான் 150 மூட்டை அரிசியும் 100 மூட்டை கோதுமையும் உற்பத்தி செய்யும். ஆக, இரண்டு நாடுகளின் மொத்த உற்பத்தி 250 மூட்டை அரிசியும், 250 மூட்டை கோதுமையும் ஆகும். இரு நாடுகளும் வர்த்தகம் செய்வதாக ஒப்புக்கொண்டன என்று வைத்துக்கொள்வோம். இந்தியா தன்னிடம் உள்ள எல்லா உற்பத்தி காரணிகளையும் பயன்படுத்தி தனக்கு Absolute advantage உள்ள கோதுமையை உற்பத்தி செய்தால், 300 மூட்டை கோதுமை உற்பத்தி செய்யும். அதே போல் பாகிஸ்தான் 300 மூட்டை அரிசியும் உற்பத்தி செய்யும். எனவே, இருநாடுகளின் மொத்த உற்பத்தி பெருகும்.

இவ்வாறு நாடுகளுக்கிடையே தடையில்லா வர்த்தகம் நிலவும் போது ஒவ்வொரு நாடும், தனக்கு absolute advantage உள்ள பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து, மற்ற நாடுகளுடன் வியாபாரம் செய்து தனக்கு absolute advantage அல்லாத பொருட்களை வாங்கிக்கொள்ளும். ஒவ்வொரு நாட்டிற்கும் ஏதாவது ஒரு சில பொருட்களில் absolute advantage இருப்பதினால் பன்னாட்டு வியாபாரம் சாத்தியமாகிறது என்று ஆடம் ஸ்மித் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x