

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையா தனது உண்மையான சொத்து விவரங்களைத்தான் நீதிமன்றத்தில் அளித்தாரா என்று உச்ச நீதிமன்றம் அவருக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது 4 கோடி டாலர்களை தனது 3 வாரிசுகளுக்கு மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு மல்லையாவிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள டியாஜியோ பிஎல்சி நிறுவனத்திடமிருந்து மல்லையா இந்த 4 கோடி டாலர்களைப் பெற்ற விவரத்தை நீதிமன்றத்திடம் தெரிவிக்கவில்லை என்று வங்கிகள் கூட்டமைப்பு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி புகார் தெரிவித்தார்.
இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட பிறகே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மல்லையா சார்பில் வாதாடிய வழக்கறிஞரிடம், “மல்லையா உண்மையான சொத்து விவரங்களை வெளியிட்டாரா?” என்று கேள்வி எழுப்பியது.
மேலும் இந்த 4 கோடி டாலர்கள் தொகையை தனது வாரிசுகள் பெயருக்கு மாற்றியது கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதா என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
இந்த 4 கோடி டாலர்கள் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் அது இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றும் வங்கிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.