Published : 29 Oct 2013 08:12 AM
Last Updated : 29 Oct 2013 08:12 AM

வட்டி விகிதம் உயருமா?- ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு

கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி இன்று அறிவிக்க உள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படும் என தெரிகிறது.



ஒன்றரை மாதத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார். பதவியேற்ற 15 நாளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கால் சதவீதம் வட்டி உயர்த்துவதாக அறிவித்தார்.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் குறுகிய காலக் கடனுக்கான (ரெபோ) விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. இது மேலும் கால் சதவீதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உள்ளதால், இதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை என்று டன் அண்ட் பிராண்ட்ஸ்டிரீட் இந்தியா நிறுவனத்தின் மூத்த பொருளாதார அறிஞர் அருண் சிங் தெரிவித்தார். கடந்த முறை எம்எஸ்எப்(marginal standing facility) அளவை 0.75 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்தது.

இதன் மூலம் எம்எஸ்எப் அளவு 9.5 சதவீதமாக இருந்தது. எம்எஸ்எப் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான வழிகளில் ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதா அல்லது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதா என்ற மிகப் பெரிய சிக்கலில் ரகுராம் ராஜன் உள்ளார்.

இப்போதைய சூழலில் அவர் பணவீக்கத்துக்குத்தான் முன்னுரிமை தர வேண்டியிருக்கும் என்று அருண் சிங் கூறினார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி. சுப்பாராவ் வட்டி விகிதத்தைக் குறைந்து வந்த நிலையில் ராஜன் ரெபோ விகிதத்தை 7.50 சதவீத அளவுக்கு உயர்த்தினார் என்று ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அபீக் பரூவா கூறினார்.

இப்போதைய வட்டி விகிதமானது வங்கிகள் தங்களது குறுகிய கால கடனை ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ள உதவுகிறது. வங்கிகள் மற்றும் வர்த்தக வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெபோ) 6.5 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதத்தை ஒரு சதவீதம் உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ ஆகியன வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாகும். வட்டி விகிதத்தை கால் சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் சந்தையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள அதிர்ச்சியூட்டும் தகவலை அளிக்கக் கூடும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌம்யா காந்தி கோஷ் கூறினார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 25 புள்ளிகள் வரை ரெபோ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தக் கூடும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார். அதேசமயம் எம்எஸ்எப் அளவை ரிசர்வ் வங்கி குறைக்கக் கூடும் என்று அவர் கூறினார். இதன் மூலம் வங்கிகள் கடன் வாங்கும் அளவைக் குறை ப்பதோடு அரசு வாங்கும் கடன் அளவு நிர்வகிக்கும் அளவுக்குள் இருக்கும் என எதிர்பார்பார்ப்பதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x