

ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதியை பொதுத்துறை வங்கிகளின் மறுமுதலீட்டுக்கு அளிப்பது சிறந்த யோசனை அல்ல என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: வங்கி அமைப்புகள் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க அதிக நிதி முதலீடு தேவைப்படுகிறது என்று மதிப்பீட்டுக்கு பிறகு தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி தங்களிடம் உள்ள உபரியான (Surplus) பணத்தை அல்லது டிவிடெண்டை அரசாங்கத்திற்கு வழங்கும். இந்த பணத்தை அரசாங்கத்திடம் வழங்கிய பிறகு அரசு எந்த வழிகளில் செலவிட விரும்புகிறதோ அதற்கு பயன்படுத்திக் கொள்ளட்டும்.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் சரிவு ஏற்பட்டால் வங்கிகளின் நிதிச் செலவினங்களிலும் சரிவு ஏற்படும். நெருக்கடியான சூழலை சந்தித்து வரும் வங்கிகள்தான் ஏதாவது செய்ய முன்வர வேண்டும். ரிசர்வ் வங்கி நிதியில் சரிவை ஏற்படுத்தக் கூடாது. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் இந்த யோசனை சரியானது அல்ல என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினையை மத்திய அரசு மிக சாதுரியமாக கையாளும் என்று நான் நம்புகிறேன். அதனால் மறுமுதலீட்டுக்கான நிதி மிக பெரிய அளவில் இருக்காது. மேலும் குறைவாக இருக்கும் என்பது என் கணிப்பு. அதுமட்டுமல்லாமல் வங்கி துறையில் பல்வேறு மாற்றங்களை செய்யவேண்டிய தேவையும் உள்ளது.
அவசர கால நடவடிக்கை தேவை
வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு சில அவசர கால நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. படிப்படியான நடவடிக்கைகள் இதுவரை இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவவில்லை.
டிசம்பர் 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அசட் குவாலிட்டி ரிவ்யூ நடவடிக்கை கூட வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை. வாராக் கடன் பிரச்சினையை தீர்த்தால்தான் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் கார்ப்பரேட் முதலீடுகளை மீட்கவும் முடியும். அதற்கு சில அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.