

ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டு பணியாளர் களுக்கு வழங்கும் ‘457-விசா’ நடைமுறை மாற்றத்தால் இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தொழில்துறை அமைப்பான நாஸ்காம் கூறியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கி வந்த 457-விசாவை சமீபத்தில் நீக்கி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைப்பான நாஸ்காம், ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு இந்திய ஐடி பணியாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருத்து தெரிவித்துள்ளது.
எதிர்பாராத இந்த முடிவுக்கு பின்னால் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளே காரணமாகும். தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இந்த விசா விவகாரத் துக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் தொடர்பு உள்ளதை பார்க்க முடிகிறது என்று நாஸ்காம் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வேலையில்லா திண்டாட்டம் உருவாகி வருவதையடுத்து ஆஸ்திரேலிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போதுவரை 457 விசாவை 95,000 தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
457 விசா கட்டுப்பாடுகளுக்கு மாற்றாக புதிய கட்டுப்பாடுகள் கொண்ட விசாவை கொண்டுவர உள்ளது. தற்போதுள்ள விசா நடைமுறையில் ஆஸ்திரேலியா வில் உள்ள நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை நான்கு ஆண்டுகளுக்கு பணிக்கு அமர்த்திக் கொள்ள முடியும். இதனால் ஆஸ்திரேலிய பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைகின்றன.
ஆஸ்திரேலிய வாடிக்கையாளர் களுடன் உள்ள வர்த்தகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த மாற்றங்கள் குறித்த அதிக விவரங்களை தெரிந்து கொள்ள இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளுடன் விரைவில் நெருங்கி பேச உள்ளோம் என்று நாஸ்காம் கூறியுள்ளது. எங்களது முதற்கட்ட கணிப்பின்படி இந்திய ஐடி பணியாளர்களுக்கு விசா கிடைப்பதில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
இந்த விசா பல்வேறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது என்றும், ஆஸ்திரேலி யாவின் அரசின் கொள்கைகள் மாறி வருகின்றன என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளது.
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் பணியிடங்களுக்கு பொறியாளர்களை அனுப்ப இந்த விசாவையே நம்பியுள்ளன. இந்த நிலையில் ஏற்கெனெவே அமெரிக்க அரசு உயர்திறன் பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் அரசும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வரிசையில் ஆஸ்திரேலிய அரசும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதனால் நிறுவனங் கள் தங்களது தொழில் வடிவங்களை விசா கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தளர்த்த வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. உள்நாட்டு அளவிலேயே பணியாளர்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தகது.