

உபெர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிராவிஸ் கலாநிக் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். 2009-ம் ஆண்டு இவர் தொடங்கிய நிறுவனம்தான் உபெர். முதலீட்டாளர்கள் நெருக்கடி காரணமாக இவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
நிறுவனத்தின் முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் நிறுவனத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான தாக புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் கலாசாரம் மற்றும் பணி நடைமுறைகள் குறித்து விசாரிக்க அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் நியமனம் செய்யப் பட்டார்.
உபெர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுடன், நடத்திய நீண்ட விவாதத்துக்கு பிறகு தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கலாநிக் ஒப்புக்கொண்டார். இருந்தாலும் இயக்குநர் குழு உறுப்பினராக அவர் தொடர்வார். தலைமை பொறுப்பில் இருந்து கலாநிக் ராஜினாமா செய்ய வேண்டும் என நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஐந்து பெரிய வென்ச்சர் கேபிடல் முதலீட்டு நிறுவனங்கள் வலியுறுத்தின.
நான் உருவாக்கிய உபெர் நிறு வனத்தில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினமான முடிவு. முதலீட் டாளர்களின் வேண்டுகோளை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் கலாநிக் தெரிவித்திருக்கிறார்.
தனிப்பட்ட நபரை விட உபெர் முக்கியம். அதனால் கலாநிக் ராஜினாமா செய்திருக்கிறார். புதிய அத்தியாயம் தொடங்குகிறது என உபெர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அதிக தகவல் கொடுக்க அவர் விரும்பவில்லை. இவரின் ராஜினாமாவால் புதிய தலைமைச் செயல் அதிகாரி யார் என்னும் கேள்வி எழுந்திருக்கிறது.
உபெர் நிறுவனம் இதுவரை 1,100 கோடி டாலர் நிதி திரட்டி இருக்கிறது. டிபிஜி கேபிடல், பிளாக்ராக், மார்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உபெரில் முதலீடு செய்துள்ளன.