

இந்தியாவில் மின்னணு முறையில் வர்த்தகம் புரியும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை என்று கோத்ரெஜ் குழுமத் தலைவர் ஆதி கோத்ரெஜ் குறிப்பிட்டுள்ளார். அதிகம் விற்பனையாகும் நுகர்பொருள் விற்பனையில் (எப்எம்சிஜி) உள்ளூர் மளிகை வியாபாரிகள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் வளரவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இ-டெய்ல் குறித்து கருத்து தெரிவித்த அவர், நவீன இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை, குறிப்பாக எப்எம்சிஜி பொருள் விற்பனையில் 90 சதவீதம் உள்ளூர் மளிகை வியாபாரிகள் மூலம்தான் நடைபெறுகிறது என்று சுட்டிக் காட்டினார்.
என்னைப் பொறுத்தமட்டில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் சரிவர செயல்படவில்லை, அதிலும் குறிப்பாக எப்எம்சிஜி சந்தையில் அவர்களின் விற்பனை உத்தி எடுபடவில்லை. அதேசமயம் துணி உள்ளிட்ட விற்பனையில் அவர்கள் ஓரளவு வளர்ச்சியை எட்டியிருக்கலாம் என்றார்.
இந்தியாவில் வளர்ச்சி என்பது வேலையில்லாத் திண்டாட் டம்தான் என்று கூறப்படுவதை மறுத்த அவர், முறைசாரா தொழிலில் தங்கள் குழுமம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி யுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 500 மீட்டர் சுற்றுப் பகுதியில் மதுபானங்கள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து சரியான முடிவல்ல. பெரும்பாலான நெடுஞ்சாலைகள் நகரங்களுக்குள் வருகிறது என்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மதுபான கடைகள் மட்டுமல்ல, மதுவை விற்பனை செய்யும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கும் பொருந்தும். அப்படி இருக்கையில் நீதிமன்றத் தீர்ப்பில் மாற்றம் செய்யாமல் நகர்ப்பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகளில் மதுபானம் விற்பது, விநியோகிப்பது எப்படி சரியாகும் என்று அவர் கேள்வியெழுப்பினார். எனக்குத் தெரிந்தவரை கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே நீதிமன்ற தடை பொருந்தும் என தான் கருதுவதாகக் குறிப்பிட்டார்.