

சீனாவை போன்று இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக ஜிடிபி எண்களில் மாற்றம் செய்யவில்லை என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சீனாவை போன்று இந்தியா இல்லை என்று நான் நம்புகிறேன். இங்கு அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு வகையிலும் ஜிடிபி எண்களில் மாற்றம் செய்யவில்லை. ஆனால் ஜிடிபி கணக்கிடுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் தகவல் களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்முடைய ஜிடிபி எண்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
அதுமட்டுமல்லாமல் அனைத்து கணிப்புகளும் தவறான கணிப்புகளாகவே வருகின்றன. மேலும் நமது அளவீடுகளும் தகவல் சேகரிப்பும் மிக மோசமானதாக இருக்கிறது.
வறுமை நிலையை பற்றி 2011-12-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இனி 2019-ம் ஆண்டில்தான் அடுத்ததாக வறுமை நிலை பற்றி கணக்கெடுப்பு வரும். ஆக 6 முதல் 8 வருடங்கள் இடைவெளி இருக்கிறது. சுமார் 8 வருடங்கள் கழித்துதான் வறுமை நிலை பற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
நகர்ப்புற வேலைவாய்ப்பை பற்றி ஆண்டுதோறும் நாம் விரைவில் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறோம். தகவல்கள் கொள்கை வடிவமைப்பில் மிகப் பெரிய பங்காற்றுகின்றன என்று அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்தார்.
2016-17-ம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் பண மதிப்பு நீக்கத்தின் பாதிப்பு இருந்தபோதிலும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என சிஇஏ கணித்திருக்கிறது. ஆனால் இந்த கணிப்பின் மேல் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய புள்ளியியல் அலு வலக கணிப்பின்படி இந்திய பொரு ளாதாரம் 2016-17 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என கூறப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் பொருளாதார நடவடிக்கையை வெகுவாக பாதிக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.