

மும்பை
தனியார் வங்கிகளில் முன்னணியில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கி நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ. 1,982.30 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட 27.1 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 1,559.90 கோடியாக இருந்தது.
நிகர வட்டி வருமானம் 15.3 சதவீதம் அதிகரித்து ரூ. 4,476 கோடியைத் தொட்டது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிகர வட்டி வருமானம் ரூ. 3,731 கோடியாக இருந்தது. நிகர லாப வரம்பு 4.4 சதவிகிதத்திலிருந்து சிறிதளவு சரிந்து 4.3 சதவிகிதமாக இருக்கிறது.
வட்டியல்லாத பிற வருமானம் 25 சதவீதம் அதிகரித்து ரூ. 1,471 கோடியைத் தொட்டுள்ளது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 11,937.70 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 10,146.70 கோடியாக இருந்தது. வங்கி வழங்கிய கடன் அளவு 16 சதவீதம் அதிகரித்து ரூ. 2,68,617 கோடியாக உயர்ந்தது. இருந்தாலும் வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 2.25 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தது.