

இந்திய விமான நிலையங்களின் ஆணையத்துக்கு (ஏஏஐ) ரூ. 70 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கை அறிக்கை (சிஏஜி) தெரிவித்துள்ளது. டெல்லி விமான நிலையத்துக்குச் சொந்தமான நிலத்தின் சில பகுதிகளை குத்தகைக்கு விடாதது மற்றும் விளம்பர ஒப்பந்ததாரருக்கு சலுகை காட்டியது ஆகிய காரணங்களால் இந்த நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் விளம்பரம் வைப்பது தொடர்பாக டிடிஐ இண்டர்நேஷனல் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலத்துக்குப் பிறகு தொகையை அளிக்கும் சலுகை காட்டப்பட்டது. இதனால் 2007 முதல் 2014-ம் ஆண்டுவரை இந்த விளம்பர பகுதி பயன்படுத்தப்படாமலேயே வீணடிக்கப்பட்டதில் ரூ.41.68 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது