

டாடா மோட்டார்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தங்களின் கார்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளன. திங்கள்கிழமை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2014- 15-ம் ஆண்டுக்காக தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஆட்டோ மொபைல் துறைக்கான உற்பத்தி வரியை குறைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைத்து இவ்விரு நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. உற்பத்தி வரி குறைப்புச் சலுகையின் பலனை வாடிக்கை யாளர்களுக்கு அளிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. எந்த அளவுக்கு கார்களின் விலையைக் குறைப்பது என்பது குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.
அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக டாடா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நிறுவனங்களின் பல்வேறு தயாரிப்புகளுக்கான உற்பத்தி வரி குறைப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு உற்பத்தி வரி குறைக்கப்பட்டது இத்துறை வளர்ச்சிக்கு மேலும் உதவும். அத்துடன் கார்களை நடுத்தர மக்கள் வாங்குவது அதிகரிக்கும் என்றும், போக்குவரத்து மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உற்பத்தி வரி குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வகையில், கார்களின் விலையை எந்த அளவுகுறைக்கலாம் என்பது கணக்கிடப்பட்டு வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் பி. பாலேந்திரன் தெரிவித்தார்.
இந்த வரி குறைப்பு நடவடிக்கை மகிழ்ச்சியை அளித்தாலும் இது குறுகிய காலத்திற்கு மட்டும்தான் என்பது சற்று வேதனையாக உள்ளது. புதிய அரசு இத்தகைய வரிக்குறைப்பு நடவடிக்கையைத் தொடரும் என்று நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்தியில் புதிய அரசு அமைந்தபிறகு இதே வரிக்குறைப்பு தொடரும் என்றால்தான் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். எஸ்யுவி, சிறிய ரகக் கார்கள் மற்றும் பெரிய ரக டீசல் கார்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்க அம்சம் என்று அவர் மேலும் கூறினார்.
மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், ஆட்டோமொபைல் துறையில் நிலவும் தேக்க நிலையைப் போக்க உற்பத்தி வரிச் சலுகையை அறிவித்தார். இதன்படி சிறிய ரக கார்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், வர்த்தக வாகனங் களுக்கான உற்பத்தி வரி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்யுவி மீதான வரி 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பெரிய கார்கள் மீதான உற்பத்தி வரி 27 சதவீதத் திலிருந்து 24 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நடுத்தர ரக கார்கள் மீதான உற்பத்தி வரி 24 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. உற்பத்தி வரி குறைப்பு ஜூன் 20, 2014 வரை அமலில் இருக்கும்.
எஸ்ஐஏஎம்
உற்பத்தி வரியைக் குறைத்ததன் மூலம் கார் உள்ளிட்ட வாகனங்களின் விலை மக்கள் வாங்கும் அளவுக்குக் கணிசமாகக் குறையும். இதனால் இத்தொழில் மேலும் வளர்ச்சியடையும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (எஸ்ஐஏஎம்) சங்கத் தலைவர் விக்ரம் கபூர் குறிப்பிட்டார். இத்தகைய நடவடிக்கை, வரும் நாள்களில் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு உதவிகரமாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஹோண்டா
மத்திய அரசு அறிவித்துள்ள இடைக்கால பட்ஜெட், ஆட்டோமொபைல் துறைக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் குறிப்பிட்டார்.
இத்தகைய உற்பத்தி வரி குறைப்பு வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்வதோடு முதல் காலாண்டு முடிவுகள் மிகச் சிறப்பாக அமைவதற்கும் வழிவகுத்துள்ளது. தேக்க நிலை காரணமாக சரிவைச் சந்தித்துவந்த கார் விற்பனை அதிகரிக்க இது உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மஹிந்திரா
ஆட்டோமொபைல் துறைக்கு இது மிகவும் உத்வேகம் அளிக்கும் அறிவிப்பு என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைமை அதிகாரி பிரவீண் ஷா தெரிவித்தார்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரி குறைப்பு 2015 நிதி ஆண்டிலும் தொடர வேண்டும். இது ஒட்டுமொத்தமாக உற்பத்தித்துறைக்கு ஊக்கமளிப் பதாக அமையும் என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பவன் கோயங்கா கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவாக 2013-ல் கார் விற்பனை 9.59 சதவீதம் சரிந்தது. பொருளாதார மந்த நிலை காரணமாக கார்களின் விற்பனை சரிந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு கார் விற்பனை 18,07,011 ஆகும். முந்தைய ஆண்டு 19,98,703 கார்கள் விற்பனையாகியிருந்தன.
கடந்த ஜனவரி மாதத்திலும் தொடர்ந்து நான்காவது மாதமாக கார்களின் விற்பனை 7.59 சதவீதம் சரிந்து 1,60,289 கார்கள் விற்பனையாயின.
வரவேற்கத்தக்கது
நிதியமைச்சரின் இந்த வரி குறைப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று மாருதி சுஸுகி நிறுவனத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கே. அயுகாவா தெரிவித்தார். தேக்க நிலையை சந்தித்து வரும் ஆட்டோமொபைல் துறைக்கு இத்தகைய ஊக்கம் மிகவும் அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.