

தொலைத் தொடர்புத் துறையில் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண்பதற்கு குறைதீர் அதிகாரி நியமிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) முடிவு செய்துள்ளது.
வங்கித்துறை மற்றும் காப் பீட்டுத் துறைகளில் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண குறைதீர் அதிகாரி (Ombudsman) உள்ளார். அதைப் போல தொலைத் தொடர்புத் துறையிலும் ஒரு தனிப் பிரிவை உருவாக்குவது குறித்து கருத்து கேட்க உள்ளது.
இந்த அதிகாரியிடம் பொது மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் செல்போன் கட்டணம், கூடுதல் கட்டணம், சேவைக் குறைபாடு உள்ளிட்ட குறைகளைக் கூறி அதற்கு தீர்வு காண முடியும்.
அதிகாரியின் செயல்பாடு, அவருக்குள்ள அதிகார வரம்பு, செயல்படும் விதம், எத்தகைய குறைகளுக்கு அவர் தீர்வு காண முடியும் என்பது தொடர்பான விதிகளை வகுத்து செயல்படுத்து வது குறித்து டிராய் ஆராய்ந்து வருகிறது.
பொதுமக்களின் கருத்துகளுக்காக இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. இப்போது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செயல் படும் விதத்தில் எத்தகைய மாற்றங் களைச் செய்யலாம் என்பது தொடர்பாகவும் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.
டிராய் இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இக்கருத்து களுக்கு மாற்று கருத்துகள் ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும்.