

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை யில் முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முந்தியுள்ளதாக இங்கிலாந்தின் ஆய்வு நிறுவனமான யர்னஸ்ட் யங் (இஒய்) கூறியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை யில் உலக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய 40 நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் இஒய் கூறியுள்ளது. இந்த பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நாடுகள் ஈர்க்கும் முதலீடுகள் குறியீடு என்கிற (RECAI) பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது : கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2015க்கு பிறகு அமெரிக்கா இந்த பட்டியலில் சரிவைக் கண்டுள்ளது.
இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருவதால் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக 2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் 2040-ம் ஆண்டுக்குள் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் புதுப் பிக்கத்தக்க எரிசக்தியின் திறன் 40 சதவீதம் அளவுக்கு இருக்கவும் அரசு செயல்பட்டு வருவதாக இஒய் கூறியுள்ளது.