

நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவீதமாகக் குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையில் முன்னணி 20 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 20,000 கோடி ரூபாய்க்கு மேலே திரட்ட முடியும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்திருக்கிறது.
இந்த பொதுத்துறை நிறுவனங்கள் இந்த வருட இறுதியில் 1.70 லட்சம் கோடி ரூபாயை ரொக்கமாக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் டிவிடெண்ட் கொடுப்பதன் மூலம் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை குறையும் என்று கிரிசில் கூறி இருக்கிறது. கூடுதலாக கிடைக்கும் 20,000 கோடி ரூபாய் மூலம் 0.2 சதவீதம் வரைக்கும் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும் என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிதியை பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை 4.8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருக்கிறது. தற்போதைய நிலையில் (இந்த டிவிடெண்ட் தொகை இல்லாமல்) நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 முதல் 5.3 சதவீதமாக இருக்கும் என்று சில முன்னணி தர ஆய்வு நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. கிரிசில் நிறுவனம் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.2 சதவீதமாக ( இந்த டிவிடெண்ட் தொகை இல்லாமல் ) இருக்கும் என்று கருத்து சொல்லி இருக்கிறது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பி.ஹெச்.இ.எல்., பி.பி.சி.எல்., கோல் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன், என்ஜீனியர்ஸ் இந்தியா, கெயில், எம்.எம்.டி.சி., எம்.ஓ.ஐ.எல்., நால்கோ, நெய்வேலி லிக்னைட், என்.ஹெச்.பி.சி., என்.எம்.டி.சி., என்.டி.பி.சி., ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி., பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஷிப்பிங் கார்பரேஷன், எஸ்.ஜே.வி.என். மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆகிய 20 நிறுவனங்கள் மூலம் நிதிப்பற்றாக்குறையை குறைக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கில் அக்டோபர் மாதத்திலேயே 84 சதவீதத்தை மத்திய அரசு எட்டிவிட்டது.
மேலும், வரி வருமானமும் எதிர்பார்க்கப்பட்டதற்கு கீழேதான் இருக்கிறது. தவிர, அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 40,000 கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் அதில் 3,000 கோடி ரூபாய் அளவுக்குதான் திரட்ட முடிந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது திட்டமிட்ட இலக்கை அடைவது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களிடம் சிறப்பு டிவிடெண்டை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த முக்கிய 20 பொதுத்துறை நிறுவனங்கள் தாரளமாக 27,000 கோடி ரூபாய் அளவுக்கு சிறப்பு டிவிடெண்ட் (வழக்கம் போல கொடுக்கும் டிவிடெண்ட் அல்லாமல்) வழங்க முடியும் என்று சொல்லி இருக்கிறது.
இப்போதைய சூழ்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களி டமிருந்து திரட்டும் தொகை உதவிகரமாக இருக்கும். இருந்தாலும், மத்திய அரசு எப்படி பொதுத்துறை நிறுவனங்களுடன் பேசுகிறது என்பதை பொறுத்துதான் இருக்கும் என்று கிரிசில் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் முகேஷ் அகர்வால் தெரிவித்தார்.
நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவதற்கு செலவைக் குறைப் பதன் மூலமும் இலக்கை அடைய முடியும். ஆனால் தற்போதைய பொருளாதார நிலையில் செலவுகளைக் குறைப்பது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. பொதுத்துறை நிறுவனங்களுடன் பேசி சம்மதிக்க வைக்க அரசு முயல வேண்டும் என்று கிரிசில் நிறுவனத்தின் முத்த இயக்குநர் சந்தீப் சபர்வால் தெரிவித்தார்.