காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்
Updated on
2 min read

போலாரிஸ் கன்சல்டிங் மற்றும் சர்வீசஸ் நிறுவனம் ஜூன் மாதம் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ. 39.72 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட இது 8.2 சதவீதம் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 492 கோடியிலிருந்து ரூ.495 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வெர்சூஸா நிறுவனம் போலாரிஸ் நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை ரூ. 1,173 கோடிக்கு வாங்கியது. தற்போது இவ்விரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.

முதல் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் ரொக்கக் கையிருப்பு ரூ. 352 கோடி என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி என்.எம். வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

அதானி பவர் நஷ்டம் ரூ.34 கோடி

அதானி பவர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நஷ்டம் ரூ. 33.51 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 171.81 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர விற்பனை வருமானம் ரூ. 5,587 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 5,945 கோடியாக இருந்தது.

இந்நிறுவனம் 1,396 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அளித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உற்பத்தி 1,586 கோடி யூனிட்டாக இருந்தது.

திரோடா மின்னுற்பத்தி நிலையத்தில் போதிய தண்ணீர் கிடைக்காததால் உற்பத்தி குறைந்தது. முந்த்ரா மின்னுற்பத்தி நிலையத்தில் 93 சதவீதமும், காவாய் மின்னுற்பத்தி நிலையத்தில் 97 சதவீத அளவுக்கு மின்னுற்பத்தி செய்யப்பட்டது.

எடெல்வைஸ் லாபம் ரூ.139 கோடி

எடெல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ நிறுவனத்தின் லாபம் 53 சதவீதம் அதிகரித்து ரூ.139 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 91 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 1,472 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,158 கோடியாக இருந்தது.

தனிப்பட்ட அளவீட்டின்படி நிறுவனத்தின் நிகர லாபம் 61 சதவீதம் சரிந்து ரூ. 11.52 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 29.57 கோடியாக இருந்தது. இதேபோல நிறுவன வருமானம் ரூ. 75.09 கோடியிலிருந்து ரூ. 92.99 கோடியாக அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கு1.62 சதவீதம் சரிந்து ரூ. 106 என்ற விலையில் வர்த்தகமானது.

கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் லாபம் 9% உயர்வு

கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 9.19 சதவீதம் அதிகரித்து ரூ. 43.48 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 39.82 கோடியாகும்.

முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 332.81 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 230.28 கோடியாக இருந்தது. முதல் காலாண்டில் ரூ. 387 கோடி மதிப்பிலான அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுத் திட்டத்துக்கான பதிவு ரூ. 312 கோடி. வர்த்தக இடங்களுக்கான பதிவு ரூ.75 கோடியாகும். முதல் காலாண்டில் 19 லட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தை நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. 12 நகரங்களில் வீடு மற்றும் வர்த்தக வளாக கட்டுமானங்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

சுந்தரம் பாசனர்ஸ் லாபம் ரூ. 75 கோடி

குழுமத்தின் அங்கமான சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.75.55 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.38.51 கோடியாக இருந்தது.

டிவிஎஸ் நிறுவனத்தின் வருமானம் ரூ. 713 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வருமானம் ரூ. 631 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் ஏற்றுமதி வருமானம் ரூ. 225.81 கோடியிலிருந்து ரூ. 246.52 கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனை வருமானம் ரூ. 455 கோடியாக அதிகரித்துள்ளது.

பிற ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையிலும் சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதால் லாபம் அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in